தேனுார் மயான குளியல் தொட்டியில் முறைகேடா
சோழவந்தான்; மதுரை மேற்கு ஒன்றியம் தேனுார் ஊராட்சி பொது மயானத்தில் போர்வெல் இன்றி அமைத்த குளியல் தொட்டியில் முறைகேடு நடந்ததாக புகார் தெரிவித்துள்ளனர்.இம்மயானத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குளியல் தொட்டி இன்றுவரை பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதனருகே உள்ள பழமையான அடிகுழாயையும் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. இந்த தொட்டிக்கு போர்வெல் அமைக்காதது குறித்து ஒன்றிய அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.தேனுார் சமூக ஆர்வலர் கார்த்திகை குமரன் கூறியதாவது: குளியல் தொட்டி கட்டும் போது அதற்கான போர்வெல் அமைக்கப்படும். இத்தொட்டியில் பதித்த கல்வெட்டில் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டால் தகவல் இல்லை. முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது. செடிகள் முளைத்து, பழுதடைந்து வருகிறது என்றார்.ஊராட்சி செயலர் சக்திவேல் கூறுகையில், ''இந்த ஊராட்சிக்கு வந்து 2 மாதமாகிறது. மாயன தொட்டி போர்வெல், சுற்றுச்சுவர் அமைக்க நிதி நிர்வாக அனுமதி அனுப்பபட்டுஉள்ளது. விரைவில் தொட்டி பயன்பாட்டுக்கு வரும்'' என்றார்.