உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இருக்கா... இல்லையா... ஆக்கிரமிப்பு குறித்து குழப்பாதீங்க: ஆபீசர்ஸ்! கலெக்டர் முன் கேள்வி கேட்ட விவசாயிகள்

இருக்கா... இல்லையா... ஆக்கிரமிப்பு குறித்து குழப்பாதீங்க: ஆபீசர்ஸ்! கலெக்டர் முன் கேள்வி கேட்ட விவசாயிகள்

மதுரை: மதுரையில் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கண்மாய், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்க 'ஆக்கிரமிப்பு இல்லை' என அதிகாரிகள் மறுத்தனர். இதனால் மறுசர்வே செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநர் முருகேசன், நீர்வளத்துறை (மேலுார்) செயற்பொறியாளர் சிவப்பிரபாகரன், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குநர் வாஞ்சிநாதன், துணை இயக்குநர் சாந்தி பங்கேற்றனர். விவசாயிகளின் கோரிக்கை அம்சத் பீவி: 2017- 18க்கான நெற்பயிருக்கு இதுவரை காப்பீட்டுத்தொகை பெறவில்லை. பார்த்தசாரதி, திருவாலவாயநல்லுார்: கலெக்டர் ஆலோசனைபடி நெல் கொள்முதல் நிலைய பிரச்னைகளுக்கு தீர்வுகாண தனிக்கூட்டம் நடந்தது. உறுதியளித்தபடி மையத்தை முழுமையாக கண்காணிக்க வேண்டும். தாலுகா விவசாய குறைதீர் கூட்டங்களின் தரத்தை உயர்த்த வேண்டும். மணிகண்டன், உசிலம்பட்டி: எந்த இடத்தில் பனைமரங்கள் இருந்தாலும் வெட்ட அனுமதிக்கக்கூடாது. செல்லம்பட்டி கரும்புகளை தஞ்சாவூர் அரசு ஆலைக்கு அனுப்ப அதிகம் செலவாகிறது. எனவே உசிலம்பட்டி, சேடப்பட்டியோடு செல்லம்பட்டி கரும்புகளையும் தேனியில் உள்ள கரும்பு ஆலைக்கு அனுப்ப வேண்டும். ராமன், நடுமுதலைக்குளம்: வாலாந்துாரில் இருந்து 15 கி.மீ., தொலைவில் விக்கிரமங்கலம் உபமின் நிலையம் செயல்படுகிறது. இப்பாதையில் தென்னை மரங்கள் இருப்பதால் ஒயர்கள் உரசி மின்தடை ஏற்படுவதால் இங்குள்ள உயர் அழுத்த மின்கோபுரத்தில் இருந்து மின்இணைப்பு கொடுக்க வேண்டும். தொட்டப்பநாயக்கனுார் செட்டியபட்டியில் விவசாயிகள் செல்லும் பாதையில் வனத்துறை வேலியிட்டு தடுத்துள்ளதை அகற்ற வேண்டும். பழனி, மேல உரப்பனுார்: திருமங்கலம் முதல் வடுகபட்டி வரை நான்குவழிச்சாலை அமைக்கும் பணிக்காக திரளி பிட் 2 கண்மாயில் 20 அடி ஆழம் வரை தனியார் நிறுவனம் மண் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும். அழகுசேர்வை, பனையூர்: பனையூர் கண்மாய் வரத்து கால்வாயை துார்வாருவது யார் பொறுப்பு. இது தற்போது மாநகராட்சி வசம் உள்ளது. தவசி, உசிலம்பட்டி: திருமங்கலம் பிரதான கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். மணி, பைபாஸ் ரோடு: அ.புதுப்பட்டி பெரியாறு வைகை 3வது பிரதான கால்வாயில் 8 வது மடை வாய்க்காலை கட்டித்தர வேண்டும். முருகன், மேலுார்: கிணறுகளில் வெட்டும் மண்ணை ஒற்றை சாளர முறையில் அனுமதி அளிக்க அரசாணை பிறப்பித்து இ- சேவை மையம் மூலம் அதற்கென செயலியை உருவாக்க வேண்டும். பழனிசாமி, கே.கே.நகர்: கேசம்பட்டி பெரியருவி அணையில் உடைந்துள்ள மதகை சரிசெய்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். சேவுகன், மாங்குளம்: பெரியாறு பிரதான கால்வாயின் 40 வது பிரிவு வாய்க்கால் சேதமடைந்துள்ளதால் விவசாயம் செய்வது தாமதமாகிறது. துரைசிங்கம், வெள்ளரிபட்டி: பெரியாறு பிரதான 10 வது கால்வாயிலிருந்து வரும் நீர் வழித்தடத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். தர்மராஜ், கருப்பாயூரணி: 23வது மடை பாசன வாய்க்காலில் ஆக்கிரமித்துள்ள தடுப்புச்சுவரை நீக்க வேண்டும். ஜெயராஜ், உசிலம்பட்டி: தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை ஒப்படைக்கும் முன் தீ வைப்பதால் கரும்பின் எடை குறைகிறது. இதற்கு தடைவிதிக்க வேண்டும். மாரிச்சாமி, பழங்காநத்தம்: மாடக்குளம் கரைகளில் சமூக விரோதிகள் சேதப்படுத்துவதால் இங்கு மீன்பாசி ஏலம் விட்டு காப்பாற்ற வேண்டும். அய்யாக்கண்ணு, மங்களக்குடி: பயிர்களை சேதப்படுத்தும் மாடுகளை பிடிக்க வேண்டும். பாண்டி, மேலுார்: புதுச்சுக்காம்பட்டி எல்லைக்குள் மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லாணை சுந்தரம், தும்பைப்பட்டி: நெல் கதிரடிக்கும் களம் அமைத்துத் தர வேண்டும். சிதம்பரம், மேலவளவு: சேதமடைந்த நெல் கதிரடிக்கும் களத்தை மராமத்து செய்ய வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர். கூட்டம் நடந்த போது டி.கல்லுப்பட்டி மோதகம் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மக்காச்சோள விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். படைப்புழுத்தாக்குதலால் பாதிப்பு எனவும் பயிர் காப்பீடு செய்தவர்களில் நிறைய பேருக்கு இழப்பீடு வழங்கவில்லை என்றனர். கலெக்டர் பேசியதாவது: தாலுகா கூட்டம் ஆர்.டி.ஓ., தலைமையில் நடத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. கரும்புக்கு தீ வைப்பது தவிர்க்க ஏற்பாடு செய்யப்படும். கண்மாய், கால்வாய்களில் ஆக்கிரமிப்பு இல்லையென நீர்வளத்துறை, பஞ்., அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விவசாயிகள் இருக்கிறது என்கின்றனர். மீண்டும் மறு சர்வே எடுக்க ஏற்பாடு செய்யப்படும். மக்காச்சோள பாதிப்பிற்கு இழப்பீடு குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Dilip Kumar
செப் 20, 2025 14:06

As a Collector directly go to site visit and check whether it is encroached or not take நெஸ்ஸ்ஸரி decision Why it is encroached and make some arrangement for their future life


Arul Narayanan
செப் 20, 2025 09:58

கூட்டத்தில் தெரிவிக்கப் படும் பிரச்சினைகள் எல்லாம் மிகச் சிறியவையாகவும் கீழ் மட்டத்திலேயே சரி செய்ய கூடியதாகவும் தெரிகின்றன. இதற்காக வட்டார அலுவலர்களுக்கு சரியான வழிகாட்டுதல்களும் கண்டிப்பும் இருக்க வேண்டாமா?


சமீபத்திய செய்தி