உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை மாஸ்டர் பிளான் திட்டம் நடப்பில் உள்ளதா.. என்னாச்சு தெரியலயே! தொழில்களுக்கு நிலஒதுக்கீடை அதிகப்படுத்தணும்

மதுரை மாஸ்டர் பிளான் திட்டம் நடப்பில் உள்ளதா.. என்னாச்சு தெரியலயே! தொழில்களுக்கு நிலஒதுக்கீடை அதிகப்படுத்தணும்

மதுரை: 'மதுரை மாஸ்டர் பிளான் 2024- 2044' க்கான திட்டத்தில் தொழில் வளர்ச்சிக்கான நில ஒதுக்கீடு 4 சதவீதமாக உள்ளதை 14 சதவீதமாக உயர்த்த வேண்டும்' என தொழிற் துறையினர் வலியுறுத்திய நிலையில், திட்டம் என்னவானது என்றே தெரியவில்லை. மருத்துவ உபகரணங்கள், ஆட்டோமொபைல் உதிரி, துணைப்பாகங்கள், ஏற்றுமதி பொருட்கள், குறு, சிறு, மத்தியத்தொழில்கள் (எம்.எஸ்.எம்.இ.,), ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், கல்வி, மருத்துவ, ஐ.டி., நிறுவனங்கள் என பல்வேறு துறைகளில் மதுரை முக்கிய தொழில் மையமாக திகழ்கிறது. தொழில்களுக்கான இடத்தேவை அதிகமாகவும், நிலப்பரப்பு குறைவாகவும் இருப்பதால் புதிய தொழில்கள் ஆரம்பிப்பதும், விரிவுபடுத்துவதும் சிரமமாக உள்ளது.

வளர்ச்சி தடைபடும்

மதுரையின் எதிர்கால பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, எம்.எஸ்.எம்.இ., தொழில்களுக்கான வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டுமெனில் தொழில்களுக்கான நில ஒதுக்கீடை அதிகரிக்க வேண்டும். மதுரை நகர வளர்ச்சிக்கான புதிய மாஸ்டர் பிளானில் (மதுரை மாஸ்டர் பிளான் 2024), தொழில் வளர்ச்சிக்காக வழங்கப்பட்டுள்ள நில ஒதுக்கீடு வெறும் 4 சதவீதமாக உள்ளது. இதனால் மதுரையின் தொழில் முன்னேற்றமும், வேலைவாய்ப்பு வளர்ச்சியும் தடைபடும் என்கின்றனர் தொழில்துறையினர். அவர்கள் கூறியதாவது: மதுரையில் கப்பலுார், புதுார் தொழிற்பேட்டைகள் நிரம்பி விட்டன. சக்கிமங்கலத்தில் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் 16 சென்ட் என குறைந்த பரப்பு தான் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலுாரில் தனியார் தொழிற்பேட்டை துவங்க திட்டமிட்டு 14 ஆண்டுகளாகியும் இன்னும் கிரையம் முழுமையாக முடியவில்லை. மதுரை மாஸ்டர் பிளான் திட்டம் 2021 - 2041 என அறிவித்து வெளிவராத நிலையில் 2024 - 2044 என மாற்றப்பட்டது. அதில் ஏற்கனவே தொழில்களுக்காக ஒதுக்கப்பட்ட 500 இடங்களை வேறு வகைப்பாட்டுக்கு மாற்றியுள்ளனர். இதை நாங்கள் மீண்டும் ஆன்லைனில் விண்ணப்பித்து அதை ஏற்றுக் கொண்ட நிலையில் திட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. தற்போதைய 4 சதவீத இடஒதுக்கீடு மதுரைக்கு போதுமானதாக இல்லை. எனவே 14 சதவீதமாக உயர்த்த வேண்டும். அரசின் பார்வை தேவை மதுரை - துாத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் தொழில்களுக்கான இடங்கள் நிறைய உள்ளன. அரசு அதை தேர்வு செய்து சிப்காட் அல்லது சிட்கோ மூலம் தொழிற்பூங்கா அல்லது தொழிற்பேட்டை அமைக்கலாம். தொழில்களுக்கான குறிப்பிட்ட பகுதியை அரசு தேர்ந்தெடுத்து அதை சிட்கோ மூலம் மேம்படுத்தினால் தான் மதுரையில் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் வளர்ச்சி பெறும். புதிய தொழில் மண்டலங்கள், வணிக பூங்காக்கள், 'லாஜிஸ்டிக் ஹப்', 'ஸ்டார்ட் அப் இன்குபேட்டர்கள்' அமைக்க வேண்டும். தென்தமிழகத்தின் தொழில் ஏற்றுமதி மையமாக மதுரையை உருவாக்கும் நீண்டகால திட்டம் அறிவிக்கப்பட வேண்டும். தொழில்களுக்கு தேவையான சாலை, குடிநீர், மின்சாரம், கழிவுநீர் சுத்திகரிப்பு, போக்குவரத்து வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். 'புதிய மாஸ்டர் பிளான்' நடவடிக்கையை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை