அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்போர் அவதி
அவனியாபுரம்: மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்போர் காளைகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்க மிகுந்த சிரமப்படுகின்றனர். அவனியாபுரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கின்றனர். ஆண்டுதோறும் தை 1, பொங்கல் திருநாளில், இங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அதற்காக காளைகளுக்கு நீச்சல், மண் குத்துதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. காளைகளுக்கு நல்லதங்காள் ஊரணி, அயன்பாப்பாக்குடி கண்மாயில் வழக்கமாக நீச்சல் பயிற்சி அளிக்கப்படும். காளைகள் வளர்ப்போர் கூறியதாவது: சில ஆண்டுகளாக நல்லதங்காள் ஊரணியில் தண்ணீர் இல்லை. அயன்பாப்பாக்குடி கண்மாயில் ஆகாய தாமரைகள் சூழ்ந்துள்ளன, அங்கு நீச்சல் பயிற்சி பெறும் காளைகள் உடலில் தோல்வியாதி ஏற்பட்டு புண்ணாகிறது. எனவே, அங்கும் நீச்சல் பயிற்சி அளிக்க முடியவில்லை. எனவே கடந்தாண்டு 1.5 கி.மீ., தொலைவில் உள்ள குன்றம் சாலையில் கல்குளம் கண்மாய் தண்ணீரில் நீச்சல் பயிற்சி அளித்தோம். அந்த ஊரணியில் ஆழம் இல்லாததாலும், அக்குளம், சுற்றுப் பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதாலும், தண்ணீர் கலங்கலாக இருந்ததாலும் காளைகளுக்கு நீச்சல் பயிற்சி அளித்தோம். அங்கு காளைகள் அதிக துாரம் நீந்திச் செல்ல முடியவில்லை. இந்தாண்டு பெருங்குடி கண்மாயில் நீச்சல் பயிற்சி அளிக்கிறோம். அங்கும் ஆழமில்லாததால் காளைகள் பயிற்சிபெற சிரமப்படுகின்றன. அயன்பாப்பாக்குடி கண்மாயில் ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும் என காளைகள் வளர்ப்போர் கோரிக்கை வைக்கின்றனர்.