உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மகப்பேறு இறப்பு தணிக்கையில் கேரளாவை பின்பற்ற வேண்டும்: மகப்பேறு டாக்டர்கள் சொசைட்டி தீர்மானம்

மகப்பேறு இறப்பு தணிக்கையில் கேரளாவை பின்பற்ற வேண்டும்: மகப்பேறு டாக்டர்கள் சொசைட்டி தீர்மானம்

மதுரை: 'கேரளாவைப் போல மகப்பேறு இறப்பு தணிக்கையின் போது நோயாளி, டாக்டர் பெயரை குறிப்பிடாமல் விசாரிக்கும் முறையை தமிழகத்திலும் பின்பற்ற வேண்டும்,' என, மதுரையில் நடந்த மகப்பேறு மற்றும் மகளிர் நல டாக்டர்கள் (மாக்ஸ்) சொசைட்டி, இந்திய மருத்துவ கழக (ஐ.எம்.ஏ.,) சங்க கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.மதுரையில் மாக்ஸ் சொசைட்டி, ஐ.எம்.ஏ., மதுரை கிளை சார்பில் மகப்பேறு டாக்டர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. முதுநிலை நிர்வாகிகள் மீனாம்பாள், பர்வதவர்த்தினி, ரேவதி ஜானகிராம் உடனிருந்தனர். மாக்ஸ் கிளைத் தலைவர் காயத்ரி, செயலாளர் பத்மா, ஐ.எம்.ஏ., கிளை செயலாளர் அழகவெங்கசேடன் கூறியதாவது:பிரசவங்களின் எண்ணிக்கையை வைத்து லெவல் 1, 2, 3 என்ற நிலையில் மருத்துவமனைகளை தரம் பிரிக்கக்கூடாது. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் கர்ப்பிணிக்கு கூட பிரசவத்தின் போது பி.பி., அதிகரித்து நிலைமை கவலைக்கிடமாக மாறலாம். பிரசவத்திற்கு பின்பே எதையும் கணிக்க முடியும். அதுபோன்ற நேரங்களில் குழந்தை பிறந்த பின் அப்பெண் இறக்க நேர்ந்தால் டாக்டர்களை குற்றவாளி போல நடத்தக்கூடாது.கேரளாவில் தான் மகப்பேறு மரணங்கள் மிகக் குறைவாக உள்ளது. அங்கு மகப்பேறு மரணம் நிகழும் போது சிகிச்சை பெற்ற பெண்ணின் பெயரையோ சிகிச்சை அளித்த டாக்டரின் பெயரையோ குறிப்பிடுவதில்லை. சிகிச்சைக்கான பதிவெண்ணை கொண்டே விசாரிக்கப்படுகிறது.தமிழகத்தில் ஒவ்வொரு மகப்பேறு மரணத்தை தணிக்கை செய்யும் போதும் டாக்டர்கள் தான் காரணம் என குற்றம் சாட்டுகின்றனர்.சிகிச்சையில் பிரச்னை இருந்ததா, கர்ப்பிணி தாமதமாக அழைத்து வரப்பட்டாரா, சிக்கலான பிரசவமா என்கிற விவரங்கள் 'கேஸ் ஷீட்டில்' இடம்பெற்றிருக்கும். இதுதான் உண்மையான தணிக்கை முறையாக இருக்கும். கேரள நடைமுறையை தமிழகத்திலும் பின்பற்ற வேண்டும். தணிக்கை செய்வதற்கு ஒருவார அவகாசம் தருவதுடன் காலை 9:00 முதல் மாலை 4:00 மணிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்.

முரண்பட்ட தணிக்கைகள்

மரணம் நிகழ்ந்தால் அதற்கான தணிக்கையில் டாக்டர்களை குற்றம் கூறும் நேரத்தில் அறுவை சிகிச்சை செய்தாலும் (எல்.எஸ்.சி.எஸ்., ஆடிட்) அதற்கும் கேள்வி கேட்கின்றனர்.தாய்க்கோ, சிசுவுக்கோ பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் தான் அறுவை சிகிச்சை செய்யப்படும். இந்த எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என கூறப்படும் போது கர்ப்பிணியை சுகப்பிரசவத்திற்காக நீண்ட நேரம் காத்திருக்க வைத்தால் இறப்பு நேரிடுவதற்கும் வாய்ப்புள்ளது. இரண்டு தணிக்கைகளும் முரண்பாடாக இருப்பதால் அறுவை சிகிச்சையை குறைக்க சொல்லும் தணிக்கையை தமிழக அரசு கைவிடவேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி