கலந்தாய்வு முறையில் இடமாறுதல் ; தொழிலாளர் துறை ஊழியர் வலியுறுத்தல்
மதுரை : 'கலந்தாய்வு முறையில் ஊழியர்களுக்கு இடமாறுதல் வழங்க வேண்டும்' என தொழிலாளர் துறை ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர். மதுரையில் தமிழ்நாடு தொழிலாளர் துறை ஊழியர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் மாநில தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. மாவட்ட நிர்வாகி கண்ணகி வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொருளாளர் பரமசிவன் துவக்கி வைத்து பேசினார். பணியிட மாறுதலை கலந்தாய்வு முறையில் நடத்தி இடமாறுதல் வழங்க வேண்டும். தொழிலாளர் துறையில் நேரடி உதவியாளர் பணிநியமன முறையை ரத்து செய்ய வேண்டும். ஆண்டுதோறும் அனைத்து பதவிகளிலும் தவறாமல் பட்டியல் வெளியிடப்பட்டு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஓட்டுனர், காவலர், அலுவலக உதவியாளர், பதிவுரு எழுத்தர், வரைவாளர், லேப்டெக்னீசியன், அட்டெண்டர், முத்திரை கொல்லர் காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். மகளிருக்கு பணியிடத்தில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன், தொழிலாளர் துறை ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் அமுதவள்ளி, பொருளாளர் பார்த்தசாரதி, இணைப் பொதுச் செயலாளர் ரவி, துணைத் தலைவர் முத்துராஜா உட்பட பலர் பேசினர். துணைத் தலைவர் சண்முகவேல் நன்றி கூறினார்.