நில ஒருங்கிணைப்பு சட்டம்: எதிரான வழக்கு தள்ளுபடி உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பொதுச் செயலாளர் பாண்டியன் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழக அரசு,'தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்கள்) சட்டம் 2023' கொண்டு வந்தது. விவசாய நிலத்தை ஒருங்கிணைப்பதற்காக உருவாக்கப்பட்டதாக கூறினாலும் விவசாயிகளின் நில உடமை, வாழ்வுரிமை மற்றும் உணவு பாதுகாப்பு உரிமைகளை பாதிக்கும் வகையில் உள்ளது. சட்டம் மூலம் ஆண்டுதோறும் விவசாய நிலத்தை அரசு கையகப்படுத்திக் கொள்ளலாம். இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும். நீர்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படும். விவசாயம் பறிபோகும்.இச்சட்டம் நில உரிமையாளர்களின் அனுமதியின்றி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நிலத்தை ஒருங்கிணைக்கும் அதிகாரம் பெற்றுள்ளது.1955 ல் கொண்டுவரப்பட்ட சாகுபடி குத்தகையாளர் பாதுகாப்பு சட்டம் உட்பட விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கும் பல சட்டங்களுக்கு முரணாக இப்புதிய சட்டம் உள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டல சட்டத்தை நீர்த்துப் போகச் செய்கிறது.விவசாய நிலம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்கு செல்லும் அபாயம் உள்ளது. நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்கள்) சட்டம் இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது. அதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: சட்டத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் யாரும் சம்பந்தப்பட்ட அமைப்பை அணுகி நிவாரணம் தேடலாம். சட்டமானது அரசியலமைப்பிற்கு எதிரானது என்பதை நிரூபிக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் நீதிமன்றம் பரிசீலிக்க இயலாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு கூறியுள்ளனர்.