மேலும் செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயிலில் பூர்வாங்க பூஜை
05-Jul-2025
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.ஜூலை 14ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. அதற்கான பணிகளை நேற்று அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் பிரவீன்குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா, போலீஸ் கமிஷனர் லோகநாதன் ஆய்வு செய்தனர். அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச்செல்வம், பொம்மதேவன், ராமையா, அறநிலையத்துறை மண்டல இணை கமிஷனர் மாரிமுத்து, கோயில் துணை கமிஷனர் சூரிய நாராயணன் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: 117 முருகன் கோயில்களில் இதுவரை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. திருச்செந்துார் போல் திருப்பரங்குன்றத்திலும் சிறு அசம்பாவிதமின்றி கும்பாபிஷேகம் நடத்தப்படும். கோயில் மேல் தளத்தில் 1700 பேருக்கு மட்டுமே அனுமதிக்க கூடிய சூழல் இருப்பதால் நகரின் பல்வேறு இடங்களில் எல்.இ.டி., திரைகள் அமைக்கப்பட்டு கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். குடிநீர், கழிப்பிட வசதிகள், தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளன. பாதுகாப்பிற்காக 3000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஜூலை 14 உள்ளூர் விடுமுறை விடுவது குறித்து முதல்வரிடம் பேசப்படும்.யாகசாலை பூஜையில் 200 சிவாச்சாரியார்கள், 70 ஓதுவார்கள் பங்கேற்கின்றனர். பெண் ஓதுவார்கள் மூலம் தமிழ் இசைக்க செய்கிறோம். கும்பாபிஷேக தினத்தன்று 4 லட்சம் பேருக்கு அமைச்சர் மூர்த்தி உணவு வழங்க 16 மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ரூ. 2.37 கோடியில் கும்பாபிஷேக பணிகள் நடந்துள்ளன. தங்கும் விடுதி, திருமண மண்டபம் உள்பட ரூ. 22 கோடியில் பணி நடக்கிறது. திருப்பரங்குன்றம் மலைக்கு ரோப் கார் அமைக்க முழு நிதியும் அரசே வழங்க உள்ளது. அதற்கான சாத்தியக்கூறு அறிக்கை பெறப்பட்டுள்ளது . விரைவில் டெண்டர் அறிவிக்கப்பட்டு பணிகள் துவங்கும் என்றார்.தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், மகளிரணி அமைப்பாளர் கிருத்திகா, ஒன்றிய செயலாளர் தங்கப்பாண்டி உடனிருந்தனர்.
05-Jul-2025