வாயை உற்று நோக்குங்கள்... வாழ்க்கையை மாற்றும் பாருங்கள்...
இன்று இதய நோய், ரத்த அழுத்தம் சாதாரணமாக காணப்படுகிறது. பல் மற்றும் ஈறு நோய் உள்ளவர்களில் 70 சதவீதம் பேர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அவர்கள் பற்களின் ஆரோக்கியத்தை அதிகம் கவனிக்க வேண்டும்.சிலருக்கு அடிக்கடி வாய் உலர்ந்து போகும். நாக்கு ஒட்டிக்கொள்வது போல் இருக்கும். வாயில் எரிச்சலும் இருக்கும். இந்த நிலைக்கு சீரோஸ்டோமியா (Xerostomia) என்று பெயர். உமிழ் நீர் சுரப்பது குறையும்போது இதன் அறிகுறிகள் தென்படும். சீரோஸ்டோமியா வருவதற்கு உணவுபழக்கம், உடலில் இரும்புசத்து குறைவு, சில மாத்திரைகள், புகை பிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கம், சர்க்கரை நோய் போன்ற பல காரணங்கள் உண்டு.இதற்கு சிகிச்சை எடுக்காவிட்டால் உணவு உண்பதற்கும் விழுங்குவதற்கும் கடினமாகிவிடும். நமது உமிழ்நீர் இயற்கையாகவே வாயில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. அது குறையும்போது சொத்தைப்பற்கள் வரும் வாய்ப்பு அதிகமாகிறது. பல் செட் அணிபவர்களும் வாய் உலர்ந்து போகும் பட்சத்தில் பல் செட் அணிய முடியாமல் அவதிப்படுவர். இது நீண்ட காலம் தொடர்ந்தால் அஜீரண கோளாறுகள், வயிறு உபாதைகள் வரக்கூடும்.வாய் துர்நாற்றம், வாயில் உள்ள பிரச்னைகளால் வருவதை விட உடலில் உள்ள உபாதைகளால் வருவதே அதிகம். நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களோ, சுவாச கோளாறோ அதிகமாக உள்ளவர்களுக்கு வாய் துர்நாற்றம் அதிகமாக இருக்கும். தொண்டைப்புண், கிருமி மற்றும் பூஞ்சை தாக்குதலின் போதும் வாயில் வெள்ளை திட்டுகள் மற்றும் வாய் துர்நாற்றமும் வரும். உடலில் வைட்டமின் சத்து குறையும்போது ஈறு நோய்களும் வாய் எரிச்சலும் ஏற்படும்.நோய்களை வாயில் தோன்றும் அறிகுறிகள் மூலமாக ஆரம்பநிலையிலேயே கண்டுபிடித்து விடலாம். சரியான முறையில் சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் வாயும் உடலும் ஆரோக்கியம் பெற்று நலமான வாழ்வுக்கு வழி வகுக்கும்.- டாக்டர் ஜெ. கண்ணபெருமான்மதுரை. 94441 54551