4 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படும் லீவ் சம்பளம்: மதுரை ஆவின் ஓய்வு பெற்ற ஊழியர்கள் புலம்பல்
இவ்வலுவலகத்தில் சீனியர் பேக்டரி அசிஸ்டென்ட், இளநிலை உதவியாளர், ரெக்கார்டு கிளார்க் என பல்வேறு நிலையில் பணியாற்றிய ஊழியர்கள் 2020க்கு பின் 80க்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்றுள்ளனர். ஓய்வூதிய பணப்பலனுடன் 'லீவ்' சம்பளமும் வழங்குவது வழக்கம். ஆனால் 2020க்கு பின் ஒருவருக்கு கூட வழங்கவில்லை.ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் 140 பேருக்கு இவ்வாறு பிரச்னை ஏற்பட்டது. அவர்களுக்கு தலா 240 நாட்களுக்கான 'லீவ்' சம்பளம் வழங்க வேண்டிய சூழ்நிலையில், பல கட்ட போராட்டங்களுக்கு பின் 8 தவணையாக வழங்க ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டது. தற்போது 4 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதுபோல் லீவ் சம்பளம் பிரச்னை ஏற்பட்டு, ஆவின் சார்பில் ரூ.பல லட்சம் வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதை சமாளிப்பதற்குள் மீண்டும் 80க்கும் மேற்பட்டோருக்கு அதே பிரச்னை எழுந்துள்ளது. இது நிர்வாக சிக்கலுக்கு வழிவகுக்கும் என புகார் எழுந்துள்ளது.பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது: நிர்வாக ரீதியாக ஒரு பிரச்னை ஏற்பட்டால் அதுபோல் மீண்டும் வராமல் எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் பார்க்க வேண்டும். ஆனால் அதே பிரச்னை மீண்டும் எழுவதற்கு குறிப்பிட்ட சில அதிகாரிகள் தான் காரணம். ஆவின் தற்போது லாபத்தில் இயங்குகிறது. ரூ.20 கோடிக்கும் மேல் 'டெபாசிட்' வைக்கப்பட்டுள்ளது. நிர்வாகம் 'சூப்பர் டேக்ஸ்' செலுத்த உள்ளது. பணம் இருந்தும் அதிகாரிகள் சிலருக்கு மனம் இல்லாததால் ஓய்வுக்கு பின் கிடைக்க வேண்டிய பணப் பலன்கள் இழுத்தடிக்கப்படுகின்றன. பொது மேலாளர் சிவகாமி எங்கள் நிலை குறித்து விசாரித்து நிலுவை பலனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.