| ADDED : பிப் 22, 2024 06:33 AM
மதுரை: மதுரையில் இருந்து தென்மாவட்ட பா.ஜ.,வினர் ஆயிரத்து 500 பேர் நேற்று சிறப்பு ரயிலில் அயோத்தி ராமர் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.கடந்த ஜன.22ல் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நடந்தது. பிரதமர் மோடி இங்கு குழந்தை ராமன் சிலையை பிரதிஷ்டை செய்து வைத்தார். இதையடுத்து தினமும் ஏராளமானோர் கோயிலுக்கு சென்று வருகின்றனர். தமிழகத்தில் இருந்தும் இக்கோயிலில் வழிபட பல ஆயிரம் பேர் செல்கின்றனர்.மத்திய அரசும் சிறப்பு ரயில்களை இயக்கி தென்மாநில பக்தர்களை அழைத்துச் செல்கிறது. மதுரை பகுதியில் இருந்து நேற்று சிறப்பு ரயில் புறப்பட்டது. இதில் தென்மாவட்டங்களைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்டோர் சென்றனர். இதற்கான பொறுப்பாளரான பா.ஜ., துணைத் தலைவர் பழனிவேல், ஐ.டி., பிரிவு மாநில துணைத் தலைவர் விஷ்ணுபிரசாத், மருத்துவ பிரிவு முரளிபாஸ்கர், ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சரவணன் உட்பட பலர் வழி அனுப்பி வைத்தனர்.ரயில் பயணம் செய்யும் ஒவ்வொருவரும் இதற்காக ரூ.3 ஆயிரம் செலுத்தியுள்ளனர். இவர்கள் 8 நாட்கள் அயோத்தி உட்பட பலபகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். அங்கு தங்குவதற்கும், உணவுக்கும் இத்தொகையில் ஏற்பாடு செய்துள்ளனர்.