| ADDED : ஜன 30, 2024 07:22 AM
மதுரை : மதுரையில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., சக்திவேல், துணை கலெக்டர் சவுந்தர்யா உட்பட பலர் பங்கேற்றனர். கடவூர் செல்வமணி அளித்த மனுவில், 'கடவூர் கண்மாயில் குடிசை மாற்று வாரியத்தால் அமைத்த தடுப்புச் சுவர் சேதப்படுத்தப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தில் அமைத்த குடிநீர் குழாயும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.கூடல்நகர் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க தலைவர் ஜவஹர், செயலாளர் நாகராஜன், துணைத் தலைவர் ராஜாமணி அளித்த மனுவில், ''மாநகராட்சி மண்டலம் 1 ஆனையூர், பொதிகை நகர், விளாங்குடி, பாரதியார் நகர் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கால்நடைகளும் ஏராளமாக சுற்றித் திரிவதால் வாகனங்களில் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்தனர்.மதுரையில் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்களுக்கு ஆண்டு தோறும் மழைக்காலங்களில் ஊக்கத் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். இந்தாண்டு அத்தொகை வழங்கப்படவில்லை. இந்தத் தொகையை வழங்க வலியுறுத்தி மதுரை பா.ஜ.,வினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். மதுரை நகர் தலைவர் மகா சுசீந்திரன் ஏற்பாட்டில், மாவட்ட பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் மனு கொடுத்தனர். நிர்வாகிகள் மணிமேகலை, வாசு கண்ணன், பிரகாஷ், பழனிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.