உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை அரசு மருத்துவமனைக்கு தினமும் 100 யூனிட் தேவைப்படுவதால் ரத்தம் கொடுப்போம்; உயிர் காப்போம்! பற்றாக்குறையை சமாளிக்க தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள் முன்வரலாம்

மதுரை அரசு மருத்துவமனைக்கு தினமும் 100 யூனிட் தேவைப்படுவதால் ரத்தம் கொடுப்போம்; உயிர் காப்போம்! பற்றாக்குறையை சமாளிக்க தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள் முன்வரலாம்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தினமும் குறைந்தது 100 யூனிட்கள் ரத்ததானம் தேவை. கல்லுாரிகளுக்கு தேர்வு, விடுமுறை தொடங்குவதால் ரத்ததானம் குறைந்து பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புள்ளது. தனிநபர்கள் மூலம் நேரடியாகவும், கல்லுாரிகள், தொண்டுநிறுவனம், அரசு, தனியார் நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்களில் கடந்தாண்டு முகாம்கள் அமைத்ததன் மூலம் 30 ஆயிரம் யூனிட் ரத்தம் பெறப்பட்டது. இதில் 35 சதவீத யூனிட்கள் தனிநபர்கள் மூலம் பெறப்பட்டது. இந்த ரத்தத்தில் இருந்து சிவப்பணு, தட்டணுக்கள், பிளாஸ்மாவை பிரித்து 72ஆயிரம் யூனிட்களாக தேவைப்படும் நோயாளி களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் தேவை

மதுரை அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு மட்டுமின்றி அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், இ.எஸ்.ஐ., மருத்துவமனை, தீவிர விபத்து சிகிச்சை பிரிவு, பல்நோக்கு மருத்துவமனை வளாகம், தோப்பூர் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கும் இங்கிருந்து ரத்தம் அனுப்பப்படுகிறது. இதனால் தினந்தோறும் 100 யூனிட்கள் ரத்ததானம் பெற்றால் தான் பற்றாக்குறையின்றி நோயாளிகளுக்கு வழங்க முடியும் என்கிறார் மதுரை அரசு மருத்துவமனை ரத்தவங்கி துறைத்தலைவர் டாக்டர் சிந்தா. அவர் கூறியதாவது: கல்லுாரி செமஸ்டர் தேர்வு, விடுமுறை, கிறிஸ்துமஸ் விடுமுறைகளின் போதும் ஏப்ரல், மே மாதங்களிலும் கல்லுாரிகளில் முகாம் அமைக்க முடியாது. இந்த காலகட்டத்தில் குடியிருப்போர் நலச்சங்கம், தொண்டுநிறுவனங்கள், அரசு, தனியார் நிறுவனங்களில் முகாம் அமைப்பதன் மூலம் ஈடுகட்ட முடியும். ரத்ததானம் செய்ய விருப்பமுள்ள நண்பர்கள் குழு, குடியிருப்போர் சங்கம், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் முகாம் அமைக்க விரும்பினால் அந்த இடத்திற்கே நடமாடும் ரத்தவங்கி பஸ் கொண்டு வரப்படும். ஒரே நேரத்தில் பஸ்சில் இருந்தபடி நான்கு பேர் ரத்ததானம் செய்யலாம். இடவசதி இருந்தால் அங்கேயே ரத்ததான முகாம் அமைக்கப்பட்டு ரத்தம் சேகரிக்கும் வேன் மட்டும் கொண்டு வரப்படும். தனிநபர்கள் காலை 9:00 முதல் மதியம் 3:00 மணி வரை ரத்தவங்கிக்கு வரலாம் என்றார். தொடர்புக்கு: 82489 23925.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ