மதுரை : மதுரையில் பா.ம.க., மாநில துணை பொதுச் செயலாளர் இளஞ்செழியனை கொலை
செய்த வழக்கில், உறவினர் காசிவிஸ்வநாதன் என்பவர் கைது செய்யப்பட்டார். கூட்டாளிகள் பத்து பேரை போலீசார் தேடிவருகின்றனர்.மதுரை அவனியாபுரம்
பெரியார் நகரை சேர்ந்த இளஞ்செழியன், 42. பைபாஸ் ரோடு வேல்முருகன் நகரில்
குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு
மகள்கள் சங்கமித்ரா, தமிழ்பிரபாவை பள்ளியில் இறக்கி விட்டு பைக்கில் வீடு
திரும்பினார். வானமாமலை இரண்டாவது மெயின்ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது,
சுமோவில் வந்த மர்ம நபர்கள், இளஞ்செழியன் பைக் மீது மோதி விழச் செய்தனர்.
எழுவதற்குள், அவர், கழுத்தை கத்தியால் குத்தி கும்பல் கொலை செய்து காரில்
தப்பியது. போலீஸ் உதவி கமிஷனர் கணேசன் மேற்பார்வையில் தனிப்படை
அமைக்கப்பட்டது. இதில், உறவினர் காசிவிஸ்வநாதனை போலீசார் நேற்று கைது
செய்து, மூன்றாவது ஜெ.எம்., கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை, ஆக.,10ம்
தேதி வரை ரிமாண்ட் செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.இவ்வழக்கில்
காசிவிஸ்வநாதன் கூட்டாளிகள் காசிராஜன், ஜெயக்குமார், மகாகனி, இளங்கோவன்,
பழனி, குட்டீஸ் (எ) கருப்புசாமி, அம்பேத்கர், பாலா (எ) காணி, சிற்றரசு,
செல்வராஜ் ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.