உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்தமனைவி, கள்ளக்காதலன் உள்பட 7 பேர் கைது

கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்தமனைவி, கள்ளக்காதலன் உள்பட 7 பேர் கைது

உசிலம்பட்டி:உசிலம்பட்டியில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையினரை வைத்து கொலை செய்த மனைவியையும், அவர்களுக்கு உதவியவர்கள், கூலிப்படையினரை போலீசார் கைது செய்தனர். உசிலம்பட்டி நேதாஜி நகரில் வசித்த காண்ட்ராக்டர் வேலுவை கொலை செய்து வீட்டில் இருந்த ஐந்து லட்சரூபாய் பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றனர் என அவரது மனைவி செல்வி நாடகமாடினார். இந்த சம்பவம் தொடர்பாக வேலுவின் தாயார் லட்சுமி கொடுத்த புகாரின் படி எஸ்.பி. அஸ்ராகார்க், எ.டி.எஸ்.பி. மயில்வாகனம், உசிலம்பட்டி டி.எஸ்.பி. குமார், இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், சப்- இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், புகழேந்தி, லிங்கசாமி, மாறன், பழனியப்பன் மற்றும் போலீசார்கள் மூன்று தனிப்படை அமைத்து விசாரணையில் ஈடுபட்டனர். முன்னுக்குப்பின் முரணாக பதில் தந்த செல்வியிடம் நடத்திய விசாரணையில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்தது தெரிய வந்தது.போலீசாரிடம் செல்வி கூறியுள்ளதாவது: நேதாஜி நகரில் தனது கணவர் வேலு, மகள்கள் திவ்யா, மோனிஷா, மகன் ஸ்ரீதர் ஆகியோருடன் வசித்து வந்த போது அந்த பகுதியில் இருந்த கரிகாலன் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கரிகாலன் மனைவியை பிரிந்து வசிப்பதால் கரிகாலனை திருமணம் செய்து கொள்ளலாம் என எண்ணியிருந்தேன். இதற்கு கணவர் தடையாக இருந்தார். வேலுவை கொலை செய்ய திட்டமிட்டோம். கரிகாலன் அவரது கூட்டாளி அன்னம்பாரிபட்டியைச் சேர்ந்த சரவணன் ஆகியோர் வேலுவை காரில் மோதி விபத்து ஏற்படுத்தி கொல்ல திட்டமிட்டனர். இதற்காக செல்வி இவர்களுக்கு 20 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். இதன்படி இரண்டு மாதங்களுக்கு முன்பு இவர்களது கூட்டாளி நாவார்பட்டியைச் சேர்ந்த சசிக்குமார் காரில் சென்று வாலாந்தூர் அருகே வேலுவை காரில் மோதி கொல்ல முற்பட்டனர். இதில் சசிக்குமார் பின்வாங்கியதால் விபத்து மட்டும் நேரிட்டது. இதன் பின்னர் அடுத்த கட்டமாக கரிகாலன், சரவணன், சசிக்குமார், சேர்ந்து பண்ணைப்பட்டியைச் சேர்ந்த ஜெயக்கொடி, கருக்கட்டான்பட்டியைச் சேர்ந்த நாகராஜையும் கொலைத் திட்டத்தில் சேர்த்துக்கொண்டனர். கிராமிய கலைஞர்களின் ஏஜென்டாக செயல்பட்ட நாகராஜ் தனக்கு மதுரையில் கூலிக்காக கொலை செய்பவர்கள் குறித்து தெரியும் என கூறியுள்ளார். நாகராஜின் ஏற்பாட்டின்படி மதுரை தெப்பக்குளம் முனியாண்டி கோயில் தெருவைச்சேர்ந்த சதீஸ் என்ற சசிக்குமார் அவரது நண்பர் மதுரை காமராஜபுரத்தைச் சேர்ந்த மாலுச்சாமி என்ற மகேஸ்வரன் ஆகியோரை ஏற்பாடு செய்தனர். இந்த கொலைக்காக ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கூலி பேசியுள்ளனர்.இரவில் தாங்கள் வரும்போது கதவை திறந்து வைக்கும்படி செல்வியிடம் கூறி இரவில் சரவணனுக்குச் சொந்தமான டாடா ஏஸ், மற்றும் ஆட்டோ ஒன்றிலும் ஏழுபேரும் ஏறிச்சென்றனர். திட்டமிட்டபடி செல்வி குழந்தைகளை பக்கத்து அறையில் தூங்க வைத்ததுடன், அறைகளின் வெளியே பூட்டியுள்ளார். முன் அறையில் கணவனுடன் படுத்திருந்த செல்வி கொலையாளிகள் வந்தவுடன் கதவை திறந்து விட்டு கணவனை வெட்டிக்கொலை செய்ய உதவியுள்ளார். கொலை செய்தவுடன் இவர்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணத்தையும் செட்டில் செய்து அனுப்பிவிட்டார். போலீசாரின் முன்பாக திருடர்கள் இப்படிச் செய்து விட்டனர் எனக்கூறி நாடகமாடி விட்டு வீட்டில் இருந்த ஒரு லட்சத்து நான்காயிரம், மற்றும் 100 கிராம் எடையுள்ள நகைகளையும் எடுத்துக்கொண்டு கோயம்புத்தூர் தப்பிச்செல்ல திட்டமிட்ட போது போலீசாரிடம் சிக்கிக்கொண்டதாக கூறியுள்ளார். செல்வி, கள்ளக்காதலன் கரிகாலன், அவரது கூட்டாளிகள் சரவணன், சசிக்குமார், நாகராஜ், கூலிப்படையினர் மாலுச்சாமி என்ற மகேஸ்வரன், சதீஸ்குமார் ஆகியோரை போலீசார், கைது செய்தனர். தலைமறைவாகிய ஜெயக்கொடியை தேடி வருகின்றனர். கொலைக்கு பயன்படுத்திய ஐந்து கத்திகள், ஐந்து மொபைல்போன்கள், இரண்டு லட்சத்து ஆறாயிரம் ரொக்கப்பணம் மற்றும் 100கிராம் நகைகளையும் கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை