உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சணல், தென்னை தொழில் துவங்க படித்த இளைஞர்களுக்கு வாய்ப்பு சிட்கோ தலைவர் மோகன் பியாரே தகவல்

சணல், தென்னை தொழில் துவங்க படித்த இளைஞர்களுக்கு வாய்ப்பு சிட்கோ தலைவர் மோகன் பியாரே தகவல்

மதுரை, : '' தமிழகத்தில் சணல், தென்னை சார்ந்த தொழில் துவங்க ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதால், படித்த இளைஞர்கள் தொழில்துவங்க முன்வரலாம்,'' என, 'சிட்கோ' தலைவர் மோகன் பியாரே தெரிவித்தார்.இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், சிறு, குறு,நடுத்தரத் தொழில் உற்பத்தி குறித்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது:தமிழகத்தில் 92 தொழிற்சாலை எஸ்டேட்களை சிட்கோ நிர்வகித்து வருகிறது. 2011 - 12க்குள் எட்டு தொழிற்சாலைகள் துவங்க திட்டமிட்டுள்ளது. 25 இடங்களில் விவசாயத்திற்கு பயன்படாத 2266 ஏக்கர் நிலங்களை தொழிற்சாலைகளுக்காக கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறு,குறு, நடுத்தரத் தொழில்களை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், மூன்று சதவீத வட்டி மானியத்துடன் கடன் வழங்குகிறது. சணல் மற்றும் தென்னை சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி வாய்ப்பு அதிகம் என்பதால், அரசு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது. படித்த இளைஞர்கள் தொழில் துவங்க வாய்ப்பு கிடைக்கிறது.தமிழகத்தில் 38ஆயிரத்து 601 தொழிற்சாலை யூனிட்கள் செயல்படுகின்றன. தொழிற்துறையில் வேகமான வளர்ச்சி இருந்தாலும், தகுதியான வேலையாட்கள் கிடைப்பது கடினம். ஆறு லட்சம் சிறு, குறுந்தொழில்களின் மூலம் 40 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். இதில் 40 சதவீதம் உற்பத்தித் தொழில்கள். 35 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாஸ்காம் ஆய்வின் படி கல்லூரி முடிக்கும் மாணவர்களில் 20 சதவீதம் பேரே கம்ப்யூட்டர், தொடர்பாற்றல் பெற்றவர்களாக உள்ளனர். இதற்காக தொழிற்சாலைகளுடன் இணைந்து வேலை வாய்ப்பு திறனை மேம்படுத்தும் வகையில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு தனிப் பயிற்சி அளிக்கப்படுகிறது. கூடுதலாக 10 ஐ.டி.ஐ.,க்கள் துவங்கப்பட உள்ளன, என்றார். சி.ஐ.ஐ., மதுரை மண்டலத் தலைவர் ஷியாம் பிரகாஷ் குப்தா வரவேற்றார். துணைத் தலைவர் தினேஷ் தலைமை வகித்தார். அமைப்பாளர் ராஜ்மோகன் திட்டத்தை விளக்கினார். துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !