| ADDED : செப் 21, 2011 12:11 AM
மதுரை : மதுரை சர்வதேச விமான நிலையத்திற்குரிய தகுதி பெற்றும் இதுவரை வெளிநாடுகளுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படவில்லை. ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் சார்பில், நவ.,15 முதல் துபாய்க்கு விமானம் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்கள் வந்து செல்லும் வகையில், மதுரை விமான நிலையத்தில் 17,500 சதுர மீட்டருக்கு நவீன ஒருங்கிணைந்த புதிய முனையம் கடந்தாண்டு செப்., 12ல் திறக்கப்பட்டது. இங்கிருந்து நவ.,15 முதல் துபாய்க்கு நேரடி சேவை தொடங்க ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் தயாராக உள்ளது. இதற்கு ஏதுவாக மதுரை சுங்கத்துறை கமிஷனர் நயினார் தலைமையில் சுங்கபணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அடுத்ததாக இலங்கை, சிங்கப்பூருக்கும் நேரடி விமான சேவை துவக்கப்படுகிறது. மதுரையில் இருந்து வெளிநாடுகளுக்கு நேரடி சேவை துவங்க அனுமதி கேட்டு விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விண்ணப்பித்துள்ளது. அக்.,15க்குள் அனுமதி கிடைத்தால் மட்டும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் பறப்பது சாத்தியம் என்று இந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்களுக்கு சம்பள பாக்கி: ஏர் இந்தியா ஊழியர்களுக்கு மாதம் ஊக்கத்தொகையுடன் சம்பளம் வழங்கப்படுகிறது. சமீபத்தில் நிதிச்சுமையால், ஊழியர்களுக்கு இழுபறியாகத்தான் ஏர்இந்தியா நிறுவனம் சம்பளம் வழங்கியது. தற்போது ஆகஸ்ட் வரை சம்பளம் கொடுத்தாலும், மூன்று மாதங்களுக்குரிய ஊக்கத்தொகை வழங்காமல் இழுத்தடிக்கிறது. இந்த வகையில் மதுரை ஊழியர்கள் 20 பேருக்கு ரூ.4 லட்சம் ஏர்இந்தியா பாக்கி வைத்துள்ளது.