| ADDED : செப் 22, 2011 12:30 AM
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இங்கு புறநகர் பகுதிகள் தற்போது வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன. இந்நகராட்சியில் ஒரு லட்சம் மக்கள் உள்ளனர். திருமங்கலத்தைச் சுற்றி புறநகர் பகுதிகளில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கு போதிய குடிநீர், சாலை, மின் விளக்கு வசதிகள் செய்து தரப்படவில்லை. பாதாள சாக்கடை திட்டம் தீட்டப்பட்டு அது ஏட்டளவில் மட்டும் உள்ளது. திருமங்கலத்திற்கு தற்போது மேலக்காலில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த தண்ணீர் நகருக்கு பற்றாக்குறையாக உள்ளது.நெரிசலான இடத்தில் மார்க்கெட் செயல்படுகிறது. இதை இடமாற்றம் செய்ய ரூ.பல லட்சம் செலவில் மீனாட்சி கோவில் பின்புறம் கட்டடங்கள் கட்டப்பட்டன. வியாபாரிகள் ஒத்துழைப்பு இல்லாதால் இங்கு மார்க்கெட் மாற்றப்படாமல், கட்டடங்கள் வீணாகின்றன. உழவர்சந்தை பயன் இன்றியுள்ளது. தற்போது பஸ் ஸ்டாண்ட் குறுகலான இடத்தில் இருக்கிறது. வெளியூர் பயணிகள் மழை மற்றும் வெயிலில் பாதிக்கப்படுகின்றனர். பஸ் ஸ்டாண்டை மாற்ற இடம் தேர்வு செய்யப்படும் அந்த திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடந்தாண்டு பெய்த மழையால் திருமங்கலத்தின் பல பகுதிகளில் 6 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்நிலையில் வெள்ள நீர் செல்லும் பாதையில் இருந்த ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டன. ஆனால் அங்கு கால்வாய் அமைக்கப்படவில்லை. இலவச கழிப்பறைகள் அமைக்கப்படவில்லை. பல இடங்களில் கட்டப்பட்ட சுகாதார வளாகங்கள் போதிய பராமரிப்பு, தண்ணீர் வசதி இன்றி பூட்டி கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் திறந்தவெளி இடங்களை கழிப்பறையாக பயன்படுத்துவதால் சுகாதாரக் கேடு நிலவுகிறது. இதுகுறிப்பு இப்பகுதி மக்களின் கருத்துக்கள் வருமாறு:
*ராமசாமி, வக்கீல் சங்க தலைவர்: திருமங்கலத்தில் பல பகுதிகளில் தற்போது சிமென்ட் ரோடுகள், தார் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் வசதி ஓரளவிற்கு செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் சாக்கடை மற்றும் கழிவு நீர் தேங்குவதால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதற்கு நகராட்சி நிர்வாகம் உடனடி தீர்வு காண வேண்டும்.*முனியாண்டி, திருமங்கலம்: மம்சாபுரம், அண்ணாநகர், என்.ஜி.ஓ., காலனி பகுதிகளில் ஆக்கிரமிப்புக்கள் ஏற்கனவே அகற்றப்பட்டன. ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களை அப்படியே விட்டுள்ளனர். இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. மம்சாபுரம் பகுதியில் ரோடுகள் சேதமடைந்துள்ளதால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.*தமிழரசி, நகராட்சி தலைவர்: நகராட்சி சார்பில் ஐந்தாண்டுகளில் ரூ.10 கோடி மதிப்பில் சிமென்ட் ரோடுகள், தார் ரோடுகள் போடப்பட்டுள்ளன. குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் ஒரளவு முடிந்து விட்டன. காவிரி கூட்டு குடிநீர் திட்டம் வந்தவுடன் புறநகர் பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் வினியோகம் செய்யப்படும். புதிய பஸ் ஸ்டாண்டிற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு அரசின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நகராட்சி சார்பில் தற்போதுள்ள பஸ் ஸ்டாண்டிற்கு அருகில் இலவச கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் போதிய இடவசதி இல்லாததால் கட்டப்படவில்லை. சுகாதார வளாகங்களில் தண்ணீர் வசதி செய்யப்படும்.