மதுரை த.வெ.க., மாநாட்டு தேதி விநாயகர் சதுர்த்திக்காக மாறுகிறதா; எஸ்.பி.,யுடன் பொதுச்செயலாளர் ஆனந்த் சந்திப்பு
மதுரை : மதுரையில் ஆக.,25ல் நடக்கும் த.வெ.க.,வின் 2வது மாநில மாநாடு, விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு காரணங்களுக்காக முன்கூட்டியோ அல்லது ஆக.,27க்கு பிறகோ நடத்தினால் பாதுகாப்பு அளிப்பதற்கு வசதியாக இருக்கும் என பொதுச்செயலாளர் ஆனந்த்திடம் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் தென்மாவட்ட ஓட்டுகளை குறிவைத்து மதுரை பாரபத்தியில் ஆக.,25ல் த.வெ.க.,வின் 2வது மாநில மாநாடு நடக்கிறது. இதற்காக கோவை தொழிலதிபர் உள்ளிட்டோரின் 506 ஏக்கர் இடம் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. மதுரை எஸ்.பி., அரவிந்த்திடம் மாநாட்டிற்கு அனுமதி கேட்டு ஜூலை 16ல் பொதுச்செயலாளர் ஆனந்த் மனு கொடுத்த நிலையில் நேற்று மீண்டும் அவரை சந்தித்தார். 'மாநாடு நடக்கும் இடத்தின் உரிமையாளரிடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஒன்றரை லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்' என ஆனந்த் தெரிவித்தார். தேதி மாறுகிறதா ஆக.27ல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதற்கு இருநாட்களுக்கு முன்பே ஆங்காங்கே ஹிந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும். அதற்கும் ஊர்வலத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். மதுரை மாவட்டத்தில் 450க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடந்த போது 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் மதுரை மாவட்டத்தில் 1800 போலீசார் மட்டுமே உள்ளனர். இவர்கள் விநாயகர் சிலைகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதுடன், மாநாட்டிற்கும் பாதுகாப்பு அளிப்பது சிரமம். வெளிமாவட்ட போலீசாரை அழைக்கலாம் என்றால் அந்தந்த மாவட்டங்களிலும் விநாயகர் சிலை, ஊர்வலத்திற்கு அவர்கள் பாதுகாப்பு அளிக்க வேண்டியிருக்கும். இதையெல்லாம் சுட்டிக்காட்டி மாநாட்டை ஆக.,25க்கு முன்போ அல்லது ஆக.,27க்கு பின்போ நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என ஆனந்த்திடம் போலீஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அவர் எதுவும் பிடிகொடுக்காமல் 'தளபதியிடம்' கேட்கிறோம் எனக்கூறியுள்ளார். கட்சி தரப்பில் கேட்டபோது, 'ஆக.,25 விஜயின் 26வது திருமணநாள், விஜயகாந்தின் 73வது பிறந்தநாள். இந்த 'சென்டிமென்ட்' கருதியே இந்த தேதியை விஜய் முடிவு செய்தார். மக்களுக்கு சிரமம் கொடுக்கக்கூடாது என்பதற்காகதான் இதுவரை யாரும் நடத்தாத பகுதியை தேர்வு செய்து மாநாட்டிற்கான பணிகள் நடந்து வருகின்றன. தேதி மாற வாய்ப்பில்லை' என்றனர்.