ரூ.3,000 லஞ்சம் வாங்கியவர் கையும் களவுமாக சிக்கினார்
மதுரை:மதுரையில், இடத்தை அளந்து தர, 3,000 ரூபாய் லஞ்சம் பெற்ற சர்வேயரை போலீசார் கைது செய்தனர்.மதுரை, சுந்தரராஜபுரம் அருகே ரத்தினபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். சென்னையில் டாஸ்மாக் மேற்பார்வையாளராக உள்ளார். இவருக்கு, மதுரை கோவலன் நகர் அருகே சுப்புலட்சுமி நகரில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அளந்து தரும்படி பிப்ரவரியில் விண்ணப்பித்தார்.மதுரை, தெற்கு தாலுகா சர்வே பிரிவில் உள்ளவர்கள் விண்ணப்பத்தை பரிசீலித்து இடத்தை பார்க்கவோ, அளந்து தரவோ முன்வரவில்லை. இதையடுத்து பாலமுருகனிடம், மீண்டும் விண்ணப்பிக்கும்படி தெரிவித்த ராஜசேகர், 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.பாலமுருகன் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அரசு அலுவலகத்தில் நேற்று பணம் பெற்ற ராஜசேகரை, லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும், களவுமாக கைது செய்தனர்.