உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மருத்துவ கவுன்சில் தேர்தலை நடத்த வேண்டும்: முன்னாள் தலைவர் கோரிக்கை

மருத்துவ கவுன்சில் தேர்தலை நடத்த வேண்டும்: முன்னாள் தலைவர் கோரிக்கை

மதுரை : தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என கவுன்சில் முன்னாள் தலைவர் டாக்டர் செந்தில் மதுரையில் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: தலைவர் மற்றும் ஏழு உறுப்பினர்கள் கொண்ட தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அமைப்பு 2018ல் உயர் நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமனால் நடத்தப்பட்டது. ஒரு லட்சத்து 25 ஆயிரம் டாக்டர்கள் கலந்து கொண்ட தேர்தலில் ஐந்தாண்டுகள் தலைவராக இருந்தேன்.2023ல் தேர்தல் அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், வேட்பாளர்களில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சட்டத்தை தற்போதைய சூழ்நிலைக்கேற்ப திருத்திய பின் தேர்தல் நடத்தலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தேர்தலுக்கு தடை விதித்தது. அதுவரை தற்போதுள்ள தலைவர் தலைமையில் உள்ள நிர்வாகிகள் தொடரலாம் என்றும், செய்யப்படும் சட்ட திருத்தத்தினை தற்போது இருக்கும் நிர்வாகிகளை கலந்து ஆலோசிக்கும் படியும் ஆணை வழங்கியது.இந்த நிலையில் தமிழக அரசு ஒரு அரசாணை வெளியிட்டு எனது தலைமையில் நடந்து வந்த நிர்வாகத்தை நீக்கிவிட்டு சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆறு நபர்கள் கொண்ட 'அட்காக்' குழு ஒன்றை அமைத்தது. அதிகாரிகளை கொண்டு கவுன்சிலை நடத்துவது முறையற்றது.தமிழக அரசு மருத்துவ கவுன்சில் சட்டத்தை புதிதாக நிறைவேற்ற ஒரு வரையறை தயார் செய்துள்ளது. இந்த வரையறை உயர் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்டுள்ளபடி தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் யாரையும் கலந்து, முடிவு செய்யப்படவில்லை. தற்போது உள்ள அமைப்பை மாற்றி தேர்தலில் டாக்டர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் ஏழு பேர் ஆகவும், அரசு நியமிக்கும் உறுப்பினர்கள் 10 பேராகவும் புது சட்ட மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மாநில மருத்துவ கவுன்சில் தன்னிச்சையாக செயல்படுவதை முழுவதுமாக பாதிக்கும். ஜனநாயக முறைப்படி தேர்தலில் வென்ற மருத்துவர்கள்தலைமையில் தான் மருத்துவ கவுன்சில் நிர்வாகம் செய்யப்பட வேண்டும் என்றார்.இந்திய மருத்துவ கழகத்தின் மாநில செயலாளர் டாக்டர் தியாகராஜன் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி