உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இதய மேம்பாட்டு சிகிச்சையில் சாதனை

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இதய மேம்பாட்டு சிகிச்சையில் சாதனை

மதுரை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இதய சிகிச்சையில் முற்றிலும் உருவாக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஒரு 'மிட்ரல் வால்வு கிளிப்' பயன்படுத்தி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். இதயவியல் துறைத்தலைவர் சிவகுமார், இதய இன்டர்வென்ஷனல் சிகிச்சை துறை இயக்குநர் செல்வமணி கூறியதாவது: 'டேவர், டி.ஏ.வி.ஆர்., டீர்' ஆகிய மூன்று மேம்பட்ட இதய கட்டமைப்பு சார்ந்த சிகிச்சைகளை மேற்கொள்ளும் நிபுணத்துவத்தை டாக்டர்கள் பெற்றுள்ளனர். மேலும் இதய சிகிச்சையில் இந்தியாவிலேயே முற்றிலும் உருவாக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட 'மிட்ரல் வால்வு கிளிப்' பயன்படுத்தப்பட்டது. சென்னைக்கு அடுத்து இம்மருத்துவமனையில் தான் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது. மார்பில் உள்ள பெருந்தமனியில் உயிருக்கு ஆபத்தான வீக்கத்தால் 70 வயது முதியவர் சிகிச்சை பெற வந்தார். 'சி.டி. அயோர்டோகிராம்' பரிசோதனையில், ரத்தநாள விரிவாக்கம் உணவுக்குழாய்க்குள் கிழிந்து சிதைவடைந்து இருந்தது. காலில் ஒரு சிறிய துளையின் வழியாக சேதமடைந்த தமனிக்குள் 'ஸ்டென்ட்' பொருத்தும் 'டேவர்' அறுவை சிகிச்சை மூலம் கிழிசல் அடைக்கப்பட்டு ரத்தக்கசிவு நிறுத்தப்பட்டது. பெருநாடி வால்வு சுருக்கம், அடைப்பின் காரணமாக இதய செயலிழப்பு நிலையோடு 68 வயது முதியவர் அனுமதிக்கப்பட்டார். இதயத்தின் இரு கீழறைகளும் சரியாக செயல்படவில்லை, ரத்தத்தை வெளியேற்றும் இதயத்தின் திறனும் குறைவாக இருந்தது. இவருக்கு சிறுநீரக செயலிழப்பு, வயிற்றில் நீர் கோர்த்தல் மற்றும் நுரையீரலில் அதிக ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் இருந்தன. இவருக்கு 'டி.ஏ.வி.ஆர்.,' முறையில் தொடையில் ஒரு சிறிய துளை வழியாக புதிய வால்வு பொருத்தப்பட்டதால் இதயம், சிறுநீரக செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டது. மற்றொரு 41 வயது நோயாளிக்கு கரோனரி தமனி நோயும், ஏற்கனவே 'ஆஞ்சியோபிளாஸ்டி' செய்த வரலாறும் இருந்தது. வழக்கமான பரிசோதனையின் போது அவருக்கு ரத்தஓட்டகுறைவின் காரணமாக விரிவடைந்த இதயத்தசை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதயத்தின் நான்கு அறைகளும் பெரிதாக விரிவடைந்து இருந்தது. மிட்ரல் வால்வு சரியாக மூடப்படாததால் ரத்தம்பின்னோக்கி பாயும் நிலையால் அடிக்கடி இதய செயலிழப்பு ஏற்பட்டது. இவருக்கு 'டீர்' முறையில் ஒரு 'கதீட்டர்' வழியாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'வால்வு கிளிப்' இதயத்திற்குள் செலுத்தப்பட்டு 'மிட்ரல் வால்வுடன்' இணைக்கப்பட்டது. இதய இன்டர்வென்ஷனல் சிகிச்சை துறை இணை நிபுணர் தாமஸ் சேவியர், அகாடமி இயக்குநர் கணேசன், மரபுவழி கோளாறுகளுக்கான சிகிச்சை நிபுணர் சம்பத் குமார், எலக்ட்ரோபிசியாலஜி துறைத் தலைவர்ஜெயபாண்டியன், இதய மயக்கவியல் துறை முதன்மை நிபுணர் குமார், இதய மற்றும் ரத்தநாள அறுவை சிகிச்சை துறைத்தலைவர் கிருஷ்ணன், முதுநிலை நிபுணர் ராஜன், ரத்தநாள அறுவை சிகிச்சைத் துறை நிபுணர் பிரபு குமரப்பன் சிதம்பரம் ஆகியோர் சிகிச்சை குழுவில் இடம்பெற்றிருந்தனர் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை