மேலுாரில் ஒரு புறம் வெள்ளம் மறுபுறம் வறட்சி சூழல்
மேலுார்: மேலுார் நகராட்சி பராமரிப்பில் உள்ள சுந்தரப்பன் குளத்தில் தற்போது ஆழப்படுத்தும் பணிகள் நடப்பதால் குளத்தினுள் தண்ணீர் சேமிக்க முடியாமல் வறட்சி காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.மேலுார் 1வது வார்டில் 2.43 ஏக்கர் பரப்பளவில் இந்தக் குளம் உள்ளது. இதனருகில் கொட்டக்குடி செல்லும் 6 வது கால்வாயில் இருந்து 3, 4 கால்வாய்கள் வழியாக வரும் தண்ணீரால் குளம் நிரம்பும். இதனால் குளத்தை சுற்றியுள்ள மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து மக்களுக்கு போதிய குடிநீர் சப்ளை செய்யப்படும்.நீர்வளத்துறையினர் கால்வாயை பராமரிக்காததாலும், நகராட்சி நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்புகளை அகற்றாததாலும், தற்போது குளத்தை ஆழப்படுத்தும் பணி நடப்பதால் கண்மாய் வறண்டுள்ளது என்பது மக்களின் குற்றச்சாட்டு. தற்போது மழை பெய்யத் துவங்கியுள்ள நிலையில் ஒருபுறம் தண்ணீர் ஓடுகிறது. இங்கு வறண்டு கிடக்கிறது.சமூக ஆர்வலர் ஸ்டாலின் கூறுகையில், ''குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள கண்மாயை சுற்றிலும் தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். ஆக்கிரமிப்பை அளவீடு செய்து அகற்றாமல் கண்மாயின் பரப்பளவு குறைந்து விட்டது.கால்வாய் தண்ணீர், மழை நீரை சேமிக்க வேண்டிய நேரத்தில் குளத்தை ஆழப்படுத்துவது பொறுப்பற்ற தன்மை. இக் கண்மாய்க்கு வரும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளேன். இதில் அதிகாரிகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனையும் அதிகாரிகள் காற்றில் பறக்கவிட்டுள்ளனர். இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் கூறுகையில், ''அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய் துறையில் மனு கொடுத்துள்ளேன். ஓரிரு நாளில் குளத்தில் தண்ணீர் நிரப்பப்படும் என்றார்.