உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை அருகே எம்.ஜி.ஆர்., சிலை சேதம்

மதுரை அருகே எம்.ஜி.ஆர்., சிலை சேதம்

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்காக தற்காலிக வாடிவாசல் அமைக்கப்படும் இடத்தில், இரண்டரை அடி உயரத்தில் அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சிலை உள்ளது. சுற்றி இரும்பு வேலி உண்டு. இதன் கதவை பூட்டாததால் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள், எம்.ஜி.ஆர்., சிலை மற்றும் பீடத்தை சேதப்படுத்தியுள்ளனர். அதை ஆய்வு செய்த அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களான கிழக்கு மாவட்ட செயலர் ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான், ஐ.டி., பிரிவு செயலர் ராஜ்சத்யன் உள்ளிட்டோர் சிலையை சீரமைத்து மரியாதை செலுத்தினர். சேதப்படுத்தப்பட்டது குறித்து இளைஞரணி செயலர் ரமேஷ், வழக்கறிஞர் பிரிவு செயலர் சேதுராமன், வட்டச்செயலர் ஜெயக்கல்யாணி ஆகியோர் அவனியாபுரம் போலீசில் புகார் அளித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சியினரை போலீசார் சமரசம் செய்தனர்.ராஜன் செல்லப்பா, '35 ஆண்டுகளுக்கு முன் இச்சிலை வைக்கப்பட்டது' என்றார். மதுரையில் எம்.ஜி.ஆர்., சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பழனிசாமி அறிக்கை: மதுரை, திருப்பரங்குன்றம், அவனியாபுரம், வாடிவாசல் அருகே அமைந்துள்ள எம்.ஜி.ஆர்., சிலையை சேதப்படுத்திய சம்பவம் பெரும் கண்டனத்திற்கு உரியது. எம்.ஜி.ஆரின் புகழையும், அவரது கொள்கைகளையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள் செய்த இழிசெயலாகவே, இதை கருதுகிறேன். இச்செயலை செய்து, பொது அமைதியை சீர்குலைக்க நினைக்கும் சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பன்னீர்செல்வம் அறிக்கை: தமிழகத்திற்கு பெருமை தேடி தந்த தலைவர்களின் சிலைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது. மதுரை மாவட்டம், அவனியாபுரம், திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலை, சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது, கடும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். இதே போல, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் உள்ளிட்டோரும் எம்.ஜி.ஆர்., சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை