எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது இல்லாத சாக்கடை பிரச்னை; அமைச்சரான பின் எப்படி வந்தது தொகுதி விசிட்டில் அமைச்சர் தியாகராஜன் டென்ஷன்
மதுரை: நான் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது இல்லாத சாக்கடை பிரச்னை, தற்போது அமைச்சரான பின் எப்படி வந்தது என தொகுதி மக்களிடம் குறைகளை கேட்க சென்ற அமைச்சர் தியாகராஜன் டென்ஷனாகி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். மதுரை மத்திய தொகுதியின் எம்.எல்.ஏ.,வான தியாகராஜன் தற்போது வாரம் ஒருமுறை தொகுதி மக்களிடம் குறைகளை கேட்க செல்கிறார். அப்போது கவுன்சிலர்களை வரக்கூடாது என உத்தரவிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக மஞ்சமேடு கோமாஸ்பாளையம் பகுதி மக்களிடம் அவர் குறைகள் கேட்டார். அப்போது அங்கிருந்த பெண்கள் சிலர், இப்பகுதியில் தொடர்ந்து சாக்கடை அடைப்பு பிரச்னை ஏற்படுகிறது. யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை உட்பட பல்வேறு புகார்களை அடுத்தடுத்து கூறினர். அப்போது ஒவ்வொருவராக பேசுங்கள் இல்லையென்றால், நீங்களே பேசிக்கோங்க, நான் வேண்டுமானால் கிளம்பி விடுகிறேன் என 'டென்ஷன்' ஆகி பேசினார். இதையடுத்து, எதிர்க்கட்சியாக இருந்து நான் எம்.எல்.ஏ., வாக இருந்தபோது இப்பகுதியில் சாக்கடை அடைப்பு உள்ளிட்ட பிரச்னைக்கு தீர்வுகாணப்பட்டது. ஆனால் இப்போது ஆளுங்கட்சி அமைச்சராக இருக்கும் போதும் மீண்டும் இதே பிரச்னை எழுகிறது. இது எப்படி சாத்தியம். அதிகாரிகள் சொல்லுங்க... என டென்ஷன் ஆனார். மாநகராட்சி அதிகாரிகள் சரியாக விளக்கம் கொடுக்கவில்லை. இதையடுத்து கமிஷனர் சித்ரா விளக்கம் கொடுத்தார். அப்போது அப்பகுதி பெண்களிடம் சாக்கடைக்குள் சாணியை போட்டுவிடக்கூடாது என கண்டித்தார். அமைச்சரிடம் சத்தமாக மக்கள் குரலை உயர்த்தி பேசிய இச்சம்பவத்தால் அப்பகுதியில் சில நிமிடங்கள் பதட்டம் ஏற்பட்டது. இதனால் அவருடன் சென்ற அதிகாரிகளும் கலக்கமடைந்தனர். தி.மு.க.,வினர் கூறுகையில், நான்கரையாண்டுகள் கழித்து தற்போது தான் குறைகளை கேட்க அமைச்சர் முழுவீச்சில் தொகுதிக்குள் செல்கிறார். மாநகராட்சி வரிவசூல் முறைகேடு சம்பவம் எதிரொலியாக கவுன்சிலர்களை உடன் வரக்கூடாது என உத்தரவிட்டுள்ளார். இதனால் மக்கள் என்ன மனநிலையில் உள்ளனர் என முன்கூட்டியே தெரியாததால் அமைச்சர் சென்றவுடன் அவர்கள் குறைகளை கொட்டி விடுகின்றனர். அவரும் டென்ஷன் ஆகிவிடுகிறார் என்றனர்.