அமைச்சர் பேச்சு வீடியோ வைரல்
மதுரை: மதுரை அலங்காநல்லுார் அருகே சால்வார்பட்டியில் தி.மு.க., சார்பில் முதல்வர் பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது. அமைச்சர் மூர்த்தி பேசியதாவது: ஒருகாலத்தில் ஆண்கள்தான் குடும்ப தலைவன் என்றனர். இன்று அது தலைகீழாக மாறிவிட்டது. பல குடும்பங்கள் பெண்களால்தான் நடக்கிறது. ஆண்கள் சம்பாதிக்கும் பணத்தை மாலையில் எங்கு கொண்டு சேர்க்கின்றனர் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. நான் கூறினால் அதை வீடியோ எடுத்து போட்டு விடுவர். திராவிட மாடல் ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.ஆயிரம் வழங்குவதால் பல குடும்பங்கள் நிம்மதியாக உள்ளன. முதல்வர் பெண்களுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறார். சால்வார்பட்டி மக்கள் அ.தி.மு.க.,வுக்கு வாக்களித்தனர். அவர்கள் வெற்றி பெற்று வந்து உங்களுக்கு எதுவும் செய்யவில்லை. இப்போது இப்பகுதியில் நீங்கள் கேட்ட சாலை, பள்ளிக் கட்டடம் செய்து தரப்பட்டுள்ளது. வனப்பகுதி சாலையும் விரைவில் அமைத்து தரப்படும். முதல்வர் ஸ்டாலினுக்கு பெண்கள் ஆதரவு 90 சதவீதம் உள்ளது. எனவே 2026 தேர்தலிலும் முதல்வர் ஸ்டாலின்தான், துணை முதல்வர் உதயநிதிதான், சோழவந்தான் எம்.எல் ஏ., வெங்கடேசன்தான் என்றார். அமைச்சர் கூறியபடியே, 'ஆண்கள் சம்பாதிக்கும் பணத்தை எங்கு கொண்டு சேர்க்கின்றனர் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை' என்ற சர்ச்சைக்குரிய பேச்சு வீடியோவாக வைரலானது.