மேலும் செய்திகள்
ஆம்புலன்ஸ்கள் விரைவாக சென்று வர நடவடிக்கை தேவை
07-Sep-2025
திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சி சைக்கிள் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்ட் பின் பகுதியில் செயல்படுகிறது. இங்கு அடிப்படை வசதிகள், தரைத்தளம், கூரை உள்ளிட்ட எதுவும் போதிய வசதியுடன் இல்லை. இடவசதி இல்லாததால் சின்னமணித் தெருவில் இருபுறமும் டூவீலர்கள் பார்க்கிங் செய்யப்படுகிறது. இதற்கு நகராட்சி சார்பில் ரூ. 10 முதல் 20 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது போக்குவரத்திற்கு பெரும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அந்தப் பகுதி மருத்துவமனைகளுக்கு நோயாளிகள், ஆம்புலன்ஸ்கள் சென்று வருவதில் சிரமம் உள்ளது. சமீபத்தில் நகராட்சி பஸ்ஸ்டாண்ட் ரூ. 2.70 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டது. இந்த சைக்கிள் ஸ்டாண்டில் சிறுதுரும்பளவுகூட பராமரிப்பு செய்யவில்லை. அடிப்படை வசதி இல்லாததால், வெளியூர் செல்வோர் மதுரை ரோடு உள்ளிட்ட பகுதி கடைகள் முன்பு வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். இதனால் கடைகளுக்காக வருவோர் வாகனங்களை ரோட்டில் நிறுத்தும் நிலை உள்ளது. இது விபத்து ஏற்பட வழிவகுக்கிறது. சில மாதங்கள் முன்பு வரை திருமங்கலம் போக்குவரத்து, டவுன், தாலுகா போலீஸ் ஸ்டேஷன்களின் அருகே வாகனங்களை நிறுத்தி செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது. போலீசார் அந்த வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்ததால் பிரச்னை முடிவுக்கு வந்தது. அதேபோன்று மற்ற இடங்களில் நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்காததால், நகருக்குள் நெரிசல், விபத்து அபாயம் ஏற்படுகிறது. நகராட்சி சைக்கிள் ஸ்டாண்டில் கட்டணம் வசூலிப்போர், வாகனங்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். விதிமுறைகளை மீறி ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
07-Sep-2025