தமிழில் பேச எழுத ஆர்வம் காட்ட வேண்டும்
மதுரை: மதுரையில் நடந்த பன்னாட்டு கருத்தரங்கில், தமிழில் பேசவும் எழுதவும் இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். சிலருக்கு பேச மட்டுமே தெரிகிறது என முன்னாள் உலகத் தமிழ்ச் சங்க இயக்குனர் பசும்பொன் பேசினார்.மதுரையில் வளர் தமிழ் ஆய்வு மன்றம், புலம் பன்னாட்டு தமிழியியல் ஆய்விதழ் சார்பில் 21வது பன்னாட்டு கருத்தரங்கம் உலகத்தமிழ்ச்சங்கத்தில் நடந்தது. நிகழ்வில் 85 கட்டுரையாளர்களின் ஆய்வு கட்டுரைகள் வெளியிடப்பட்டன.உலகத் தமிழ்ச் சங்க முன்னாள் இயக்குனர் பசும்பொன் பேசுகையில், ''தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கில மொழி கலப்பில் பேசுவது, எழுதுவது வழக்கமாகிவிட்டது. தமிழில் பேசவும், எழுதவும் இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். இவ்வாறான நிலை தொடர்ந்தால் பிட்யின்( இரண்டு மொழி கலப்பில் பேசப்படும்மொழி) மொழியாக தமிழ் மாறிவிடும். வாழும் செம்மொழிகளில் ஒன்றாக இருக்கிறது தமிழ் மொழி'' என்றார். வளர் மன்றத் தலைவர் தாயம்மாள் அறவாணன், செயலாளர் மைக்கேல் சரோஜினி, துணைத் தலைவர் அமலாதேவி, மீனாட்சி கல்லுாரி முதல்வர் வானதி, அரசு கலைக் கல்லுாரி முத்துலட்சுமி, சங்க ஆய்வு வளமையர் ஜான்சிராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.