| ADDED : ஆக 21, 2024 04:25 AM
மதுரை : தேனி மாவட்டம் பொட்டிப்புரம் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்திற்கு தடை கோரிய வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ 2015 ல் தாக்கல் செய்த பொதுநல மனு: தேவாரம் அருகே பொட்டிப்புரம் மேற்குத் தொடர்ச்சி மலையின் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையத்தை மத்திய அரசு அமைக்க உள்ளது. இதற்காக தோண்டப்படும் சுரங்கங்கள், அதற்கு பயன்படுத்தப்படும் வெடிபொருட்களால் முல்லைப் பெரியாறு அணை, இடுக்கி அணை உள்ளிட்ட 12 அணைகள் சேதமடையும். வெடிபொருட்கள், கதிர்வீச்சின் காரணமாக நிலத்தடி நீர் மாசுபடும். மேற்குத் தொடர்ச்சி மலையில் இயற்கைவளம் பாதிக்கப்படும். வன விலங்குகள், விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படும். நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.மத்திய அரசு தரப்பு: திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டது. திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டது. அதற்கு எதிராக ஒரு தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.மனுதாரர் தரப்பு: மூத்த வழக்கறிஞர் வாதிட அவகாசம் தேவை. இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதிகள் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.