ஜூலை 1 முதல் அகவிலைப்படியை நிலுவைத்தொகையுடன் வழங்குக என்.ஜி.ஓ., சங்கம் வலியுறுத்தல்
மதுரை ''மத்திய அரசை போல மாநில அரசும் நடப்பாண்டுக்கான அகவிலைப்படி உயர்வை அறிவித்து கடந்த ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு நிலுவையுடன் வழங்க வேண்டும்,'' என, மதுரையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய (என்.ஜி.ஓ.,) மாநில தலைவர் மகேந்திரகுமார் கூறினார். அவர் கூறியதாவது: தமிழக அரசு நடைமுறைப்படுத்தும் உங்களுடன் ஸ்டாலின், மக்களுடன் முதல்வர், முதல்வரின் முகவரி உள்ளிட்ட நலத்திட்டங்களை ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர் மேலாண்மை அமைப்பை ஏற்படுத்தி, மக்களிடம் கொண்டு செல்ல அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் முன்னோடியாக உள்ளனர். அதிகரிக்கும் விலைவாசி உயர்வு அடிப்படையில் மக்கள் வாங்கும் திறன் மாறிவருவதைக் கணக்கிட்டு, 1.7.2025 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படியை அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் எதிர்பார்த்துள்ளனர். மத்திய அரசு 1.7.25 முதல் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி அறிவித்துள்ளது. மத்திய அரசு எப்போதெல்லாம் அகவிலைப்படி, ஊதிய உயர்வு வழங்குகிறதோ அப்போதெல்லாம் தமிழக அரசு அனைத்து பணியாளர்களுக்கும் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாட அகவிலைப்படி உயர்வை 1.7.25 என்ற முன்தேதியிட்டு நிலுவையுடன் வழங்க வேண்டும் என்றார்.