நவ. 29ல் கடை அடைப்பிற்கு ஆதரவில்லை தொழில் வர்த்தக சங்கங்கள் அறிவிப்பு
மதுரை: ஜி.எஸ்.டி., வரி உயர்வை கண்டித்து அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நவ. 29 ல் நடத்தப்படும் கடையடைப்பு போராட்டத்தில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மதுரை வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கம் பங்கேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது,.மதுரை வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ரத்தினவேலு கூறியதாவது: வணிக கட்டட வாடகை மீது புதிய வரி விதிக்கப்படவில்லை. ஏற்கனவே வணிக கட்டடங்களின் வாடகை மீது ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டுள்ளது. கடைக்காரர்கள் வாடகை, அதற்குரிய வரியை செலுத்தி விட்டு உள்ளீட்டு வரி வரவாக எடுத்துக் கொண்டு, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியில் கழித்துக் கொள்ளலாம். ஏற்கனவே காம்பவுண்டிங்' முறையில் வரிச் சலுகை பெறுவோர் இதை அனுபவிக்க முடியாது. தொழில் வணிகத் துறையினரின் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண 'வணிகர்களின் ஜி.எஸ்.டி., கவுன்சில்' அமைக்க வேண்டும் என்பதை மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தி வருகிறோம். எனவே வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள வேளாண், உணவு, பட்டாசு உட்பட பல்வேறு தொழில் செய்யும் வணிகத்தினர் கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள். மற்ற அமைப்புகளும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றார்.தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் கூறியதாவது: தொழில் வணிகர்களின் பிரச்னைகளை மத்திய, மாநில அமைச்சர்கள், துறை சார்ந்த அதிகாரிகளிடம் கொண்டு சேர்க்கிறோம். ஜி.எஸ்.டி., கவுன்சிலில் தொழில் வர்த்தக சங்க பிரதிநிதிகளைக் கொண்டு தேசிய அளவில் ஆலோசனை குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்று வரை நிறைவேற்றவில்லை. மாநில நிதி அமைச்சர்கள் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க செல்லும் முன் தொழில் வணிகத்துறையினரிடம் ஆலோசனை செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளும் நிறைவேற்றவில்லை. அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கிய பிக்கி, சி.ஐ.ஐ., அசோசம், சி.ஏ.ஐ.டி., போன்ற தொழில் வணிக சங்கங்கள் இப்பிரச்னைக்கு தீர்வு காண முயற்சித்தால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும். எனவே நவ. 29 கடையடைப்பு போராட்டத்தால் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை என்பதால் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கலந்து கொள்ளாது என்றார்.