போலியாக கையெழுத்து போட்டு மூதாட்டியிடம் ரூ.4 கோடி மோசடி
கோவை: கோவை சிங்காநல்லுார், ஆர்.கே.கே.நகரை சேர்ந்தவர் விசாலாட்சி, 73. இவரின் கணவர் ராமச்சந்திரன் இறந்து விட்டார். விசாலாட்சியின் இரண்டு பெண்கள் அமெரிக்காவில் வசிக்கின்றனர். மூதாட்டி மட்டும் சிங்காநல்லுாரில் வீட்டில் தனியாக வசிக்கிறார். இவரின் குடும்ப நண்பரான சக்திவேல், 58, மற்றும் அவரின் உதவியாளர் ஜெயலட்சுமி ஆகியோர், மூதாட்டி வீட்டின் மேல் தளத்தில் வசித்து வந்தனர்.மூதாட்டியின் கணவர் 4 கோடி ரூபாயை, வங்கியில் விசாலாட்சி பெயரில் டிபாசிட் செய்திருந்தார். வங்கி கணக்குகளை சக்திவேல் கையாண்டு வந்தார். இந்நிலையில், சக்திவேல் தொழில் துவங்க உள்ளதாக,மூதாட்டியிடம் தெரிவித்தார். அவரிடம் ஒருவெற்று பேப்பரில் கையெழுத்து பெற்றார்.இந்நிலையில், கடந்த நவ., 30ம் தேதி மூதாட்டி, சக்திவேலுக்கும் மூதாட்டிக்கும் பணம் கொடுப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. மூதாட்டியை சக்திவேல் தாக்கினார்.இதனால், சந்தேகமடைந்த மூதாட்டி வங்கிக்கு சென்று விசாரித்தார். அப்போது, மூதாட்டி மற்றும் அவரின் கணவர் ராமச்சந்திரன் கையெழுத்தை, சக்திவேல் போலியாக போட்டு வங்கி கணக்கில் இருந்த 4 கோடி ரூபாய் மற்றும் 200 சவரன் தங்க நகைகளை,எடுத்து சென்றதுதெரிந்தது. சிங்காநல்லுார் போலீசில் விசாலாட்சி அளித்த புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.