உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாயமான கோயில் சொத்துக்கள் மீட்புஆவணத்தை தாக்கல் செய்ய உத்தரவு

மாயமான கோயில் சொத்துக்கள் மீட்புஆவணத்தை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: கரூர் மாவட்ட கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க தாக்கலான வழக்கில் அவற்றின் தற்போதைய நிலை விபரங்களுடன், ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என 2015 ல் அறநிலையத்துறை கமிஷனர் அனுப்பிய சுற்றறிக்கை ஆவணம் மாயமானதை மீட்டு தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. சேலம் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு:கரூர் கல்யாண பசுபதீஸ்வர சுவாமி கோயில், தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமணா சுவாமி கோயில், நெரூர் அக்னீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 64 கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அதனை அகற்றி சொத்துக்களை மீட்கக்கோரி தமிழக வருவாய்த்துறை, பத்திரப்பதிவுத்துறை, அறநிலையத்துறை செயலர்கள், அறநிலையத்துறை, நில நிர்வாக கமிஷனர்களுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் ஆஜராகி வாதிட்டதாவது: கரூர் மாவட்டத்தில் கோயில்களுக்கு சொந்தமான 500 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவற்றை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க அறநிலையத்துறை உள்ளிட்ட அரசின் இதர துறைகள் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். இதற்கு ஒத்துழைப்பு அளிக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறநிலையத்துறை திருச்சி இணை கமிஷனர், கரூர் உதவி கமிஷனருக்கு அத்துறையின் கமிஷனர் 2015 ல் சுற்றறிக்கை அனுப்பினார். அது மாயமாகிவிட்டது. இதற்கு போலீசில் புகார் அளிக்க வேண்டும். சிலரின் அழுத்தம் காரணமாக 500 ஏக்கரை மீட்க நடவடிக்கை இல்லை. இதில் பட்டா மாறுதல் நடந்துள்ளதற்கு எதிராக பெயரளவிற்கு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட கோயில்களுக்கு சொந்தமாக 1500 ஏக்கர் நிலம் உள்ளது. அரசு தரப்பு: மனுதாரர் பொத்தாம் பொதுவாக கூறுகிறார். புள்ளி விபரங்கள் தேவை. இவ்வாறு விவாதம் நடந்து. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கரூர் மாவட்டத்திலுள்ள கோயில்களின் பெயர்கள், அவற்றிற்கு சொந்தமான நிலம், அதன் பரப்பளவு, அவை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனவா, ஆக்கிரமிப்புகளை அகற்ற மேற்கொண்ட நடவடிக்கை, நிலத்தின் தற்போதைய நிலை, சொத்து ஆவணங்கள் வருவாய்த்துறை, அறநிலையத்துறை சார்பில் பராமரிக்கப்படுகிறதா விபரங்களை அறநிலையத்துறை கமிஷனர், கலெக்டர் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என 2015 ல் கமிஷனர் அனுப்பிய சுற்றறிக்கை ஆவணம் மாயமானதை கண்டுபிடித்து இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.மனுதாரர் இவ்வழக்கில் 14 கோயில்களை எதிர்மனுதாரர்களாக சேர்த்துள்ளார். இத்துடன் சேர்த்து குறைந்தபட்சம் 20 கோயில்களின் சொத்து விபரங்களை அக்.29 ல் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை