குப்பை, இறைச்சிக் கழிவால் நிரம்புகிறது ஒட்டான்குளம்
வாடிப்பட்டி : வாடிப்பட்டி பேரூராட்சி ஒட்டான்குளத்தில் கழிவுநீருடன், குப்பை, இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.தாதம்பட்டி மந்தை பகுதியில் உள்ள இக்குளத்திற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பெய்யும் மழை நீர், வடிகால் கழிவுநீர் வரத்து உள்ளது.ஆறு ஆண்டுகளுக்கு முன் ரூ.ஒரு கோடியில் குளத்தைச் சுற்றி தடுப்புக் கம்பிகள், 'பேவர் பிளாக்' நடைபாதை, படிக்கட்டுகள் கட்டப்பட்டன. இதனால் இப்பகுதியினர் அதிகளவில் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். இந்நிலையில் குளத்தின் தடுப்புக் கம்பிகள் சேதப்படுத்தப்பட்டு திருடு போனது. குளத்திற்குள் ஆகாயத் தாமரைச் செடிகள் பரவிப் படர்ந்துள்ளன. பிளாஸ்டிக், மது பாட்டில்களுடன் கோழி, மீன் இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் நிலவுவதால் நடைப்பயிற்சி வர தயங்குகின்றனர். எனவே ஒட்டான்குளத்தை துார்வாரி பராமரிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.