ஓவர்சீயருக்கு ஓவருங்க... இடமாறுதலின்றி ஒரே இடம்
மதுரை: மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் நீண்டகாலமாக ஒரே ஒன்றியத்தில் பணியாற்றும் பணி மேற்பார்வையாளர்களுக்கு (ஓவர் சீயர்கள்) இடமாறுதல் வழங்கப்படுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் இந்த 'ஓவர்சீயர்' 3 அல்லது 4 பேர் பணியாற்றுகின்றனர். மதுரை மாவட்டத்தில் 13 ஒன்றியங்கள் உள்ளன. இவர்கள் ஒன்றிய பொறியாளர்களின் கீழ், வளர்ச்சித் துறையில் ரூ. 2 லட்சம் மதிப்பீட்டுக்கு குறைவான திட்டங்களை அனுமதித்து பணிகள் மேற்பார்வையிடுவர். மேலும் மகாத்மா காந்தி ஊரக பணிகளில் நடக்கும் வேலைகளையும் கண்காணிப்பர். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இவர்களை இடமாறுதல் செய்ய வேண்டும் என்பது விதி.அதற்கு மாறாக நீண்ட காலமாக 35 பேர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் உள்ளதால் மனஉளைச்சலில் உள்ளனர். நீண்டகாலமாக இருப்பதால் அந்தந்த பகுதியில் ஊழியர்கள், பொதுமக்கள் சிலரோடு மனத்தாங்கலும் ஏற்பட்டு விடுகிறது. இடமாறுதல் வழங்க கலெக்டர் சங்கீதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.