திருப்பரங்குன்றம் கோயிலில் பிப்.10ல் பாலாலயம்
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கான பாலாலயம் பிப். 10 மதியம் 12:00க்கு மேல் 12:10க்குள் நடக்கிறது.கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் முடிந்த நிலையில் சுப்பிரமணிய சுவாமி கோயில், உப கோயில்களான மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், சன்னதி தெரு சொக்கநாதர் கோயில், மலை அடிவாரத்தில் உள்ள பழநி ஆண்டவர் கோயில், பெரிய ரத வீதி அங்காள பரமேஸ்வரி குருநாதர் சுவாமி கோயில், மேல ரத வீதி பாம்பலம்மன் கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.முதல் கட்டமாக சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுரம், கோவர்த்தனாம்பிகை விமானம், விநாயகர் சன்னதி விமானம், வல்லப கணபதி சன்னதி விமானம், பசுபதீஸ்வரர் சன்னதி விமானம் மற்றும் உப கோயில்களுக்கும் பிப். 10 அன்று திருப்பணிகள் துவங்கும் வகையில் பாலாலயம் நடக்கிறது என அறங்காவலர் குழுத்தலைவர் சத்யபிரியா, துணை கமிஷனர் சூரிய நாராயணன், அறங்காவலர்கள் மணிச்செல்வம், பொம்மத்தேவன், சண்முகசுந்தரம், ராமையா தெரிவித்தனர்.
ஏடு கொடுக்கும் விழா
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா 8ம் நாளான நேற்று ஏடு கொடுக்கும் விழா நடந்தது.காலையில் நடராஜர், சிவகாமி அம்பாள் தனித்தனியாக ரத வீதிகளில் புறப்பாடாகி கோயில் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினர்.நடராஜர் கரத்தில் இருந்த ஏடுகளை சிவாச்சாரியார்கள் பெற்று சிவகாமி அம்பாள் கரத்தில் சாத்துப்படி செய்தனர். தீபாராதனைக்கு பின்பு சுவாமிகள் சேர்த்தி சென்றனர்.முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா நாளை (பிப். 7) நடக்கிறது. அதற்குமுன் நிகழ்ச்சியாக இன்று தை கார்த்திகையை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை சிம்மாசனத்தில் புறப்பாடாகி ஜி.எஸ்.டி. ரோடு தெப்பக்குளத்தில் மிதவை தெப்பத்தை முட்டு தள்ளும் நிகழ்ச்சியும், அதைதொடர்ந்து சிறிய வைர தேரில் தேரோட்டம் நடைபெறும். இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி, தெய்வானை வீதி உலா நிகழ்ச்சி நடக்கும்.