மீனாட்சி அம்மன் கோயிலில் பெண் பக்தருக்கு பளார் ஒப்பந்த நிறுவன பாதுகாவலர் ஆத்திரம்
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று அதிகாலை திருவனந்தல் பூஜைக்காக வந்த பெண் பக்தருக்கும், ஒப்பந்த நிறுவனத்தின் பாதுகாவலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் இருவரும் மாறி மாறி தாக்கிக்கொண்டனர்.இக்கோயிலில் தினமும் அதிகாலை 5:00 மணியளவில் திருவனந்தல் பூஜை நடக்கும். நேற்று அதிகாலை அம்மன் சன்னதியில் பூஜை நடந்தபோது, பா.ஜ., நிர்வாகி ஒருவரின் மனைவி, வரிசையில் இருந்து விலகி முன்னேறிச்சென்றார். அவரை தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் பாதுகாவலர் சரவணன் தடுத்தார்.இதில்அவரது கை தன் மீது பட்டதாக கூறி பெண் பக்தர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பாதுகாவலரை தாக்கினார். ஆத்திரமுற்ற சரவணன், பெண் பக்தர் கன்னத்தில் அறைந்தார். இதனால் இருவருக்கும் லேசான கைகலப்பு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் சமரசம் செய்தனர்.இதைதொடர்ந்து இருவரிடமும் பேஷ்கார் உள்ளிட்ட கோயில் அலுவலர்கள் விசாரித்தனர். இருவர் மீதும் தவறு இருப்பது தெரிந்ததால் சமரசமாக செல்லுமாறு அறிவுறுத்தினர். அவர்களும் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபம் பாதுகாப்பு பணிக்கு சரவணனை இடமாற்றி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.