உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்த வசூல் செய்வதால் பாதிப்பு ஊராட்சி செயலாளர்கள் புலம்பல்
மதுரை: மதுரை மாவட்டத்தில் 'உங்களுடன் ஸ்டாலின் முகாம்' நடத்த ஊராட்சிகளில் வசூல் செய்வதால் தாங்கள் பாதிக்கப்படுவதாக ஊராட்சி செயலாளர்கள் புலம்புகின்றனர். அரசு சார்பில் ஊராட்சிகளில் இம்முகாம்கள் நடத்தப்படுகின்றன. பெரிய ஊராட்சிகளாக இருந்தால் நான்கைந்து கிராமங்களை இணைத்து ஓரிடத்தில் நடத்தப்பட்டன. இதற்காக ஷாமியானா பந்தல், அரங்குகளில் கணிப்பொறி வைத்து பதிவு செய்வதற்கான ஏற்பாடு, ஊழியர்களுக்கு சாப்பாடு, டீச்செலவு, ஸ்டேஷனரி என அதிகம் செலவாகிறது. இதற்கான நிதி பின்னாளில் வழங்கப் படும் என தெரிவித்து உள்ளனர். எனவே செலவினங்களை அனைத்து கிராமங் களிடமும் பகிர்ந்து வசூலிக்கப்பட்டது. ஒரு முகாம் நடத்த ரூ.1.20 லட்சம் ஆகிறதென்றால் ஒரு கிராமத்திற்கு ரூ.30 ஆயிரம் முதல் வசூலித்து நடத்துகின்றனர். இத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை. தற்போது 2வது கட்ட முகாம் நடத்த உள்ளனர். இம்முறை 2 கிராமங் களுக்கு ஒரு முகாம் என அறிவித்து நடத்துகின்றனர். இதனால் செலவினங்கள் குறைந்தாலும், முன்பு போலவே கிராமங்களில் ஊராட்சி செயலாளர்களிடம் வசூலும் நடக்கிறது. ஏற்கனவே நிதியின்றி உள்ள ஊராட்சிகளில் இச்செலவையும் ஏற்பதற்கு சிரமப்படுகின்றனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர் சங்க மாநில தலைவர் சார்லஸ் கூறியதாவது: ஊராட்சிகள் ஏற்கனவே தெருவிளக்கு, கழிவுநீர் வாய்க்கால் உட்பட தேவைகளை நிறைவேற்ற போதுமான நிதியின்றி உள்ளன. இந்நிலையில் சிறப்பு முகாம்களுக்கும் வசூலிப்பதால் ஊராட்சி செயலாளர்கள் திண்டாடுகின்றனர். ஏற்கனவே செலவிட்ட தொகை அரசால் வழங்கப்படவில்லை. எனவே சிறப்பு முகாம் களுக்கு போதுமான நிதியை அரசு ஒதுக்க வேண்டும் என்றார்.