உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அவசரத்திற்கு ஒதுங்க வழியின்றி அவசரமாக திறந்த பஸ்ஸ்டாண்ட் மேலுார் பயணிகள் குமுறல்

அவசரத்திற்கு ஒதுங்க வழியின்றி அவசரமாக திறந்த பஸ்ஸ்டாண்ட் மேலுார் பயணிகள் குமுறல்

மேலுார்: மேலுாரில் இலவச கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகளை செய்து முடிக்காமல் புதிய பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்தின் மீது புகார் எழுந்துள்ளது.மேலுாரின் மையப் பகுதியில் 1965 முதல் பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. 84 வருவாய் கிராமங்களின் தலைமையிடமான பஸ் ஸ்டாண்டுக்கு தினமும் 30 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் அத்தியாவசிய தேவைகளுக்காக வருகின்றனர்.அதனால் மேலுாரில் ரூ. 6.60 கோடியில் 18 கடைகள், பொருட்கள் வைப்பு அறை உள்ளிட்ட நவீன வசதிகளுடன் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டி, ஜன. 12 ல் திறக்கப்பட்டது. ஆனால் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.பயணிகள் கூறியதாவது: புதிய பஸ் ஸ்டாண்டில் இலவச கழிப்பறை பணியை முடிக்கவில்லை. காத்திருப்போர் அறைக்கான பணியும் முடியாததால் பூட்டிக் கிடக்கிறது. இங்கு குடிநீர் வசதியும் கிடையாது. 18 கடைகளையும் திறக்காததால் அத்தியாவசிய, உணவுப் பொருட்கள் வாங்க முடியாமல் குடும்பத்துடன் வருவோர் அவதிப்படுகிறோம். பஸ்ஸ்டாண்ட் பயன்பாட்டுக்கு வந்த ஏழு நாட்களில் கைப்பிடி உடைந்து விட்டது. முறையான திட்டமிடல் செய்து அடிப்படை வசதிகளை செய்யாமல் திறப்பு விழாவிற்கு பிறகு வேலை பார்ப்பது அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது என்றனர்.நகராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், இலவச கழிப்பறையை கட்டி முடிக்கும் வரை கட்டண கழிப்பறையை மக்கள் இலவசமாக பயன்படுத்தலாம். இரண்டு இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இணைப்பு வழங்கவும், காத்திருக்கும் அறை, கடைகள் விரைவில் திறக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ