கால்நடை மருந்தகங்களின் நிரந்தர பணியாளர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லையே...; ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசாணை என்ற குழப்பத்தால்
மதுரை: கால்நடை பராமரிப்புத்துறையில் வெளியிடும் குழப்பமான அரசாணையால் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நிரந்தரப் பணியாளர்களுக்கு சம்பளம் நிறுத்தப்படுகிறது. நிரந்தர அரசாணை வெளியிட்டு தடையின்றி சம்பளம் வழங்க வேண்டும் என அரசு கால்நடை துறை உதவி டாக்டர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் குமுறுகின்றனர். தமிழகத்தில் பத்தாண்டுகளாக கால்நடை கிளை நிலையங்கள் மருந்தகங்களாகவும், மருந்தகங்கள் மருத்துவமனைகளாகவும் தரம் உயர்த்தப்பட்டன. அங்கு பணிபுரியும் நிரந்தரப் பணியாளர்களை தற்காலிக மருந்தக, தற்காலிக மருத்துவமனையாகவே கணக்கிடுகின்றனர். 'தற்காலிகம்' என்ற நிலையை மாற்றினாலே இந்த அரசாணை வெளியிட வேண்டியதில்லை என்கின்றனர் உதவி டாக்டர்கள், பராமரிப்பு உதவியாளர்கள். அவர்கள் கூறியதாவது: கால்நடை துறையின் கீழ் உதவி டாக்டர்கள், ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் என 6 ஆயிரத்து 800 பேருக்கு தனி அரசாணை மூலம் 6 மாதங்களுக்கு ஒருமுறை சம்பள ஆணை வழங்கப்படுகிறது. ஜூன் அரசாணை முடிந்த நிலையில் ஜூலை மாத சம்பளம் வழங்கவில்லை. கூடுதல் இயக்குநரிடம் கேட்டால், துறை செயலரையும், செயலரை கேட்டால் கால்நடை துறை இயக்குநரகத்தையும் கை காட்டுகின்றனர். தற்போது ஆய்வாளர்களுக்கு மட்டும் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. கால்நடை உதவி டாக்டர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் 2 ஆயிரம் பேருக்கு வரவில்லை. நிரந்தரப் பணியாளர்களான எங்களுக்கு நிரந்தர அரசாணை மூலம் மாதந்தோறும் தடையின்றி சம்பளம் வழங்க வேண்டும் என்றனர்.