உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தீயணைப்புக்காக புதிய குழாய்கள் பதிக்க திட்டம்

தீயணைப்புக்காக புதிய குழாய்கள் பதிக்க திட்டம்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை பழைய வளாகத்தில் கூடுதல் தண்ணீர் குழாய்களை இணைத்து தீயணைப்புக்கான அவசர ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு கட்டப்பட்ட அறுவை சிகிச்சை வளாகத்தில் (ஜெய்க்கா கட்டடம்) தீயணைப்பு அலாரம், புகை அலாரம், தண்ணீர் குழாய் இணைப்புகள், பூத்துாவலாய் துாவும் 'ஸ்ப்ரிங்க்ளர்' கருவிகள், தீயணைப்பான்கள் உள்ளன. மருத்துவமனையின் பழைய வளாகத்தில் 8 போர்வெல் உள்ளன. இரண்டு செயல்படாமல் உள்ளது. மகப்பேறு வார்டு அருகில் அடுத்தடுத்து தலா 2 லட்சம் லிட்டர் கொள்ளவுள்ள தரைத்தளத் தொட்டிகள் மூலம் மாநகராட்சி தண்ணீர் பெறப்படுகிறது. அதிலிருந்து 11 இணைப்புகள் (சம்ப்) வழியாக அனைத்து வார்டுகளுக்கும் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த வார்டுகளில் தீவிபத்து ஏற்பட்டால் தீயை அணைப்பதற்கு என தண்ணீர் குழாய்கள், வால்வுகள் பொருத்தப்பட்டு பல ஆண்டுகளாக பயன்படுத்தாததால் அவை பழுதடைந்தும் பைப்கள் நொறுங்கியும் உள்ளன. தற்போதைக்கு அந்தந்த வார்டுகளில் மட்டும் தீயணைப்பு சிறிய கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. குழாய்களை அகற்றி விட்டு தீயணைப்புக்கான குழாய்கள் பொருத்த வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண்தம்புராஜிடம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் திட்ட மதிப்பீடு ரூ.50 லட்சம். மகப்பேறு வார்டின் ஒரு தரைத்தளத் தொட்டியில் இருந்து தீயணைப்புக்காக மட்டும் தனிக்குழாய்கள் பதிக்கப்பட்டு அதன் மூலம் அனைத்து வார்டுகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. கிணற்றை துார்வார வேண்டும் இங்கு 10 அடி சுற்றளவில் 120 அடி ஆழத்தில் மிகப்பெரிய கிணறு தற்போதுள்ள ஆக்சிஜன் யூனிட் அருகே உள்ளது. கிணற்றில் தண்ணீர் இல்லையென கைவிடப்பட்ட நிலையில் தற்போது ஊற்றாக பெருகி வருகிறது. எனவே கிணற்றை துார்வாரி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் வெளியில் இருந்து தண்ணீர் வாங்கும் மருத்துவமனையின் தேவையில் ஒரு பகுதியை குறைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !