காவல் பணியாளர் ஆர்ப்பாட்டம்
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே புத்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காவல் பணியில் இருந்தவர்களுக்கு கீதாரி பட்டமும், தானமாக நிலங்களும் வழங்கப்பட்டுள்ளது.இந்த நிலங்களை 1985ல் நில கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ், ஆதிதிராவிட நலத்துறைக்கு அரசு வழங்கியுள்ளது. 2021 ல் அந்த இடத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்காமல், தனி நபர்களுக்கு முறைகேடாக பட்டா வழங்கி வருவதாகவும், கையகப்படுத்திய நிலங்களை மீண்டும் காவல் பணி செய்தோரின் வாரிசுகளுக்கு வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு பிறமலைக் கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை வலியுறுத்தி வருகிறது.இதன் நிர்வாகிகள் ராஜபாண்டி, பூபதிராஜா உள்பட பலர் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 'மாவட்ட நிர்வாகம் முறையாக ஆய்வு செய்து மீண்டும் உரிய பயனாளிகளுக்கு நிலங்களை வழங்கும் வரை போராட்டத்தை தொடர்வோம்' என்றனர்.