உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

டூவீலர் திருடியவர் கைது

வாடிப்பட்டி: மேட்டுப் பெருமாள் நகர் அஜித்குமார் 27, தனியார் நிறுவன ஊழியர். வீட்டின் முன் நிறுத்தியிருந்த இவரது டூவீலர் 2 நாட்களுக்கு முன் திருடுபோனது. எஸ்.ஐ., கணேஷ்குமார் தலைமையில் போலீசார் நாகராஜ், பழனிவேல் விசாரித்தனர். திண்டுக்கல் தாமரைபாடி சக்திவேல் மகன் மதனை 23, கைது செய்து டூவீலரை பறிமுதல் செய்தனர்.

மின்சாரம் தாக்கி பசு பலி

சோழவந்தான்: ஊத்துக்குழி திருமலை என்பவரின் நிறைமாத பசு அப்பகுதியில் உள்ள தோப்பில் மேய்ந்தது. அங்கிருந்த கம்பி வேலியின் மீது மின் கம்பி அறுந்து கிடந்துள்ளது. தாழ்வான கம்பி வேலியை பசு தாண்ட முயன்றபோது மின்சாரம் தாக்கி பசு இறந்தது.

16 நாள் குழந்தை பலி

வாடிப்பட்டி: கோட்டைமேடு முனீஸ்வரன் 40, பெங்களூர் ஐ.டி., நிறுவன ஊழியர். 2வயதில் மகள் உள்ளார். மதுரை தனியார் மருத்துவமனையில் இவரது மனைவி உஷாதேவிக்கு ஜன.25ல் குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. நேற்று குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கோயில் முன் கொலை

மதுரை: திடீர்நகரைச் சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் 32. திருமணம் ஆகாதவர். மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் ஸ்டாண்டில் டிக்கெட் ஏஜென்டாக இருந்தார். நேற்றுமுன்தினம் இரவு வீட்டருகே உள்ள சந்தன மாரியம்மன் கோயில் முன்பு வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில் அப்பகுதியைச் சேர்ந்த மூவர், போதையில் அவரிடம் தகராறு செய்து கொலை செய்தது தெரிந்தது. அவர்களை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் பிடிபட்டால்தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

150 கிலோ கஞ்சாவுடன் கைது

மதுரை: ஆரப்பாளையம் வைகை தென்கரையில் கரிமேடு போலீசார், அவ்வழியே வந்த கண்டெய்னர் வேனை சோதனையிட்டபோது 150 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. விசாரணையில் ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலுாரில் இருந்து கஞ்சா வாங்கி வந்து மதுரையில் விநியோகிக்க திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தனர். இதுதொடர்பாக கோவை பிரேம்குமார், மதுரை அலெக்ஸ் பாண்டியன், விஜயகுமார், திருச்சி தீபக் ஆகியோரை கைது செய்தனர்.

நாய் வடிவில் வந்த எமன்

கொட்டாம்பட்டி : தாமரைப்பட்டி குமரேசன் 35, கரூரில் தனியார் கல்லுாரி உணவக ஊழியர். மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று மணப்பட்டி பிள்ளையார் கோயிலில் தன் சகோதரர் திருமணம் முடிந்ததும் உறவினர்களை வீட்டில் இறக்கி விட்டவர் மீண்டும் மணமக்களை அழைக்க காரை ஓட்டிச் சென்றார். தும்பைபட்டி நான்கு வழிச்சாலையில் சென்றபோது நாய் குறுக்கே வரவே திடீரென பிரேக் போட்டதில் கார் நிலைத்தடுமாறி சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. இதில் குமரேசன் துாக்கி வீசப்பட்டு இறந்தார். எஸ்.ஐ., ஆனந்தஜோதி விசாரிக்கிறார்.

கோயில்களில் திருட்டு

பேரையூர்: காளப்பன்பட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கோயிலில் இருந்த உண்டியல், 5 பவுன் தங்க காசு, வெள்ளிக் காசுகள், குத்துவிளக்கு, அண்டா உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றனர். கோவில் பூசாரி பாண்டி 39, புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர். அதேபோல் அதே ஊரில் ஆதி சிவன் கோயிலில் இருந்த குத்துவிளக்குகள், விளக்கு, மணி உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். சேடபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை