உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சங்கிலியுடன் வீட்டுத்திண்ணையில் சிறை: 10 ஆண்டுகளுக்கு பின் இளைஞர் மீட்பு

சங்கிலியுடன் வீட்டுத்திண்ணையில் சிறை: 10 ஆண்டுகளுக்கு பின் இளைஞர் மீட்பு

மதுரை: மதுரை இளமனுார் புதுார் குமராயி மகன் பழனிச்செல்வன் 32. மனநலம் பாதித்து பத்தாண்டுகளாக வீட்டுத் திண்ணையில் கை, கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த நிலையில் நேற்று மீட்கப்பட்டு தோப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மதுரை காமராஜ் பல்கலையில் 2011ல் முதலாண்டு படிக்கும் போது பழனிச்செல்வனுக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டது. தொடர் சிகிச்சை அளிக்க முடியாமல் வீட்டில் தங்கவைக்கப்பட்டார். மாவட்ட மனநல திட்ட அலுவலர் டாக்டர் சந்தோஷ் கூறியதாவது: சங்கலியால் கட்டப்பட்டதில் அவரால் கைகளை முழுமையாக அசைக்க முடியவில்லை. தோப்பூரில் சிகிச்சை துவங்கியுள்ளோம். மனநலம் பாதித்து திரிந்த 30 பேர் இம்மையத்தில் சிகிச்சையில் உள்ளனர். எங்களது சமூகப்பணியாளர்கள் மூலம் வாகனத்தில் இம்மையத்திற்கு அழைத்து வருகிறோம். இதில் 15 பேர் பெண்கள். 3 மாதங்கள் வரை தொடர் சிகிச்சை அளித்து அவர்கள் வேலை செய்வதற்கான வாழ்வாதார பயிற்சியும் அளிக்கிறோம். இந்த முறையில் இதுவரை 110 பேரை அவர்களது குடும்பத்துடன் சேர்த்துள்ளோம். இங்கு உணவு, உடை, மருத்துவ சிகிச்சை, வேலை வாய்ப்பு பயிற்சி அனைத்தும் இலவசம். இம்மையத்திற்கு தேவையான நிதியுதவி, பணியாளர்களை எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை வழங்கி வருகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !