டி.கல்லுப்பட்டியில் செயல் அலுவலர் இல்லாமல் பணிகளில் பாதிப்பு ஒன்றரை ஆண்டுகளாக பொதுமக்கள் அவதி
டி.கல்லுப்பட்டி : டி. கல்லுப்பட்டி பேரூராட்சியில் ஒன்றரை ஆண்டுகளாக செயல் அலுவலர் பணியிடம் காலியாக இருப்பதால் வளர்ச்சிப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.டி.கல்லுப்பட்டி பேரூராட்சியின் 15 வார்டுகளிலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இங்கு செயலர் அலுவலராக பணியாற்றிய கண்ணன் இடமாறுதல் செய்யப்பட்டார். அதன்பின் புதிய செயல் அலுவலர் நியமனம் செய்யப்படவில்லை. பேரையூர் பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் கூடுதல் பொறுப்பாக டி.கல்லுப்பட்டி பேரூராட்சியையும் கவனிக்கிறார்.தற்போது டி.கல்லுப்பட்டி பேரூராட்சி பகுதிகள் விரிவடைந்து ஏராளமான புதிய குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. நிரந்தர செயல் அலுவலர் பணியிடம் காலியாக இருப்பதால் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர், தெரு விளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளில் தாமதம் ஏற்படுகிறது. புதிதாக வீடு கட்டுவோர் பிளான் அப்ரூவல், பெயர் மாற்றம், பிறப்பு, இறப்பு சான்றிதழ் வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.இது போன்ற பணிகளை கவனிக்க செயல் அலுவலர் இல்லை. பொறுப்பு செயல் அலுவலர் வாரத்திற்கு 2 நாட்கள் வரும் நிலையில் அனைத்து பணிகளையும் கவனிக்க முடியவில்லை. இதனால் பணிகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. பேரூராட்சி பகுதிகளில் 2 ஊரணிகளை துார்வார ரூ. ஒரு கோடிக்கு மேல் நிதி ஒதுக்கி ஓராண்டாகியும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கவுன்சிலர்கள், பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் இதுவரை பலனில்லை. உள்ளாட்சித் துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்ல பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.