ராமநாதபுரம் -- ராமேஸ்வரம் மின்மயமாக்கல் பணி நிறைவு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் தகவல்
மதுரை: ''மதுரைக் கோட்டத்தில் ராமநாதபுரம் -- ராமேஸ்வரம் இடையே 52 கி.மீ., ரயில் பாதைமின்மயமாக்கல் பணி நிறைவு பெற்று சோதனை ஓட்டம் முடிந்தது. விரைவில் மின்சார இன்ஜின் மூலம் ரயில்கள் இயக்கப்படும்'' என சுதந்திர தின விழா உரையில் கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா தெரிவித்தார். மதுரை ரயில்வே காலனி மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றி அவர் பேசியதாவது: மதுரைக் கோட்டத்திற்கு கடந்த ஆண்டை விட 9.1 சதவீதம் கூடுதலாக, கடந்த 4 மாதங்களில் ரூ.451.76 கோடி வருவாய் கிடைத்துள்ளது. பயணிகள் சேவை மூலம் ரூ.289.88 கோடி, சரக்குப் போக்குவரத்து மூலம் ரூ.129.82 கோடி, இதர பயணிகள் வருமானம் ரூ.19.91 கோடி, வணிக ஒப்பந்தங்கள் மூலம் ரூ.12.15 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 166.3 லட்சம் பேர் பயணித்துள்ளனர். இந்நிதியாண்டில் 10 ஆயிரத்து 170 விரைவு ரயில்கள், 6 ஆயிரத்து 931 பாசஞ்சர் ரயில்கள் 97.97 சதவீதம் காலம் தவறாமல் இயக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து 2வது ஆண்டாக, கடந்த நிதியாண்டிலும் 3 மில்லியன் டன்னுக்கு மேல் சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த 4 மாதங்களில் குறித்த இலக்கைக் காட்டிலும் 5.93 சதவீதம் அதிகமாக 1.0854 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. திருமங்கலம், சிவகாசி, ராமநாதபுரம் லாந்தை போன்ற முக்கிய நகரங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. குறுகிய கால இடைவெளியில் 52 கி.மீ. ராமநாதபுரம் -- ராமேஸ்வரம் ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டு, ஆக., 13ல் சோதனை ஓட்டம் நடந்தது. உரிய ஆய்விற்குப் பின் மின்சார இன்ஜின் மூலம் ரயில்கள் இயக்கப்படும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் காரைக்குடி, சோழவந்தான், ஸ்ரீவில்லிபுத்துார், மணப்பாறை ஸ்டேஷன்களில் மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்து செப்.,ல் பயன்பாட்டுக்கு வரும். ரயில்வே சொத்துகளை திருடிய 86 குற்றவாளிகள் பாதுகாப்பு படையினரால் (ஆர்.பி. எப்.,) கைது செய்யப்பட்டு ரூ.4.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. பயணிகள் தவறவிட்ட ரூ.79.60 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கண்டறியப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.கூடுதல் கோட்ட மேலாளர் ராவ், உள்கட்டமைப்பு முதன்மை திட்ட மேலாளர் ஹரிகுமார், கோ ட்ட ரயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் செஞ்சையா, ஊழியர் நல அதிகாரி சங்கரன் உட்பட பலர் பங்கேற்றனர்.