மறுபிரேத பரிசோதனை; உயர்நீதிமன்றத்தில் முறையீடு
மதுரை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் மரணமடைந்தது தொடர்பாக தானாக முன்வந்து விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையிடப்பட்டது. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு முன் வழக்கறிஞர் மாரீஸ்குமார் ஆஜராகி முறையிட்டதாவது:மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலுக்கு வந்த ஒரு பெண் பக்தரின் காரிலிருந்த நகை திருடுபோனது. கோயில் காவலாளியாக இருந்த அஜித்குமாரிடம் திருப்புவனம் போலீசார் விசாரித்தனர். போலீசார் தாக்கியதில் அவர் இறந்தார். 2021 முதல் தற்போதுவரை 25 பேர் போலீஸ் காவலில் இறந்துள்ளனர்.அஜித்குமாரின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். எய்ம்ஸ் டாக்டர்கள் குழு மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும். வழக்கின் விசாரணையை சி.பி.ஐ., அல்லது சிறப்பு விசாரணைக் குழுவிற்கு மாற்ற உத்தரவிடும் வகையில் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.நீதிபதிகள்: 25 பேர் போலீஸ் விசாரணையில் இறந்ததாக கூறப்படுகிறது. இதில் மேற்கொண்ட நடவடிக்கை என்ன. அஜித்குமாரை தாக்கியது ஏன்.அரசு தரப்பு வழக்கறிஞர்: முறையீடு செய்பவர் எவ்வித ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை.பொத்தாம் பொதுவாக கூறுகிறார். மனு தாக்கல் செய்யும்பட்சத்தில் தெளிவுபடுத்தப்படும்.நீதிபதிகள்: மனு தாக்கல் செய்யும்பட்சத்தில் விசாரிக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.