நிறைவேறாத கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரலில் பேராட்டம் வருவாய்த்துறை அலுவலர்கள் அறைகூவல்
மதுரை: 'கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரலில் உறுப்பினர் சந்திப்பு, ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக வருவாய்த்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.மாநில தலைவர் முருகையன், பொதுச்செயலாளர் சங்கரலிங்கம் கூறியதாவது: வருவாய்த்துறையில் அலுவலக உதவியாளர் காலியிடங்களை நிரப்ப முதல்வர் உத்தரவிட்டும் 2 ஆண்டுகளாக தாமதம் செய்வதை விடுத்து உடனே ஆணைகள் வழங்க வேண்டும். பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட முதுநிலை வருவாய் ஆய்வாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.நகர்ப்புறங்களில் சான்றிதழ்களை விரைந்து வழங்க, தாலுகா, கோட்ட அலுவலகங்களில் கூடுதல் துணைத்தாசில்தார் பணியிடம் ஏற்படுத்த வேண்டும். நிலஎடுப்பு பணிகளுக்கு வழங்கப்பட்ட 20 துணை கலெக்டர், தாசில்தார் பணியிடங்களை கலைப்பதை கைவிட வேண்டும்.இவற்றுடன், பங்களிப்பு ஓய்வூதியம் ரத்து, ஈட்டிய விடுப்பு ஒப்படை ஊதியம், வருவாய் அலுவலர்களுக்கு சிறப்பு பணிபாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம். வருவாய்த்துறை கூட்டமைப்பு சார்பில் ஏப்.7 ல் உறுப்பினர் சந்திப்பு, பிரசாரம், ஏப்.25 ல் ஆர்ப்பாட்டம் நடத்த கரூரில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம் என்றனர்.