அதீத பணி அழுத்தத்தால் நாளை முதல் விதிப்படி வேலை வருவாய்த்துறை அலுவலர்கள் முடிவு
மதுரை : ''அதீத பணிஅழுத்தம் மற்றும் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை (பிப்.13) முதல் விதிப்படி வேலை செய்ய உள்ளதாக'' தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர்.அரசின் முக்கிய துறைகளுள் ஒன்றான வருவாய்த்துறையினரும், பிறதுறை ஊழியர்களைப் போல பழைய ஓய்வூதிய திட்டம் அமல், 21 மாத கால நிலுவைத் தொகை, அகவிலைப்படி நிறுத்தம், சரண்விடுப்பு ஊதியம் போன்றவற்றை வலியுறுத்தி வருகின்றனர். அவகாசம் தருவதில்லை
அத்துடன் துறை சார்ந்து அதீத மனஅழுத்தத்தில் பணிபுரிவதாகவும், அதை களைய வேண்டும் எனவும் வேதனை தெரிவித்தனர். வருவாய்த் துறையில் இ.பி.எம்.எஸ்., என்ற திட்டத்தின் கீழ் (எலக்ட்ரானிக்ஸ் புரமோஷன் மேனேஜிங் சிஸ்டம்) கடும் நெருக்கடி ஏற்படுவதாக கூறுகின்றனர். வருவாய்த்துறையில் கிராம உதவியாளர்கள் முதல் தாசில்தார் வரை பணிகளில் பதவி உயர்வு வழங்க, ஊழியர்களின் பணிப்பதிவேடை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். 30 ஆண்டுகள் பணியாற்றும் ஒரு ஊழியருக்கே பதிவேற்றம் செய்ய 3 மணி நேரத்திற்கும் மேலாகிறது.ஆனால் மாநில அளவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் விபரங்களை நான்கைந்து நாட்களில் பதிவேற்றம் செய்து தரும்படி நெருக்கடி கொடுப்பதாக புலம்புகின்றனர். பதிவேற்றம் செய்யும் மென்பொருளில் நடைமுறை சிக்கல்கள் பல உள்ளன.நகர்ப்புறங்களில் பட்டா கொடுப்பதற்கு 15 நாட்கள் அவகாசம் அளிக்கின்றனர். வழக்கமான பணிகளுக்கிடையே களஆய்வு செய்து வழங்க நடவடிக்கை மேற்கொள்வதில் கூடுதல் காலஅவகாசம் தேவை. அதை தரமறுக்கின்றனர். விண்ணப்பம் முதல் அனைத்தும் ஆன்லைனில் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் அதற்கேற்ற கட்டமைப்பு கிடையாது. வருவாய் ஆய்வாளர் முதல் ஊழியர்களுக்கு லேப்டாப் உட்பட உபகரணங்கள் வழங்கவில்லை. விதிப்படி வேலைவருவாய் அலுவலர்கள் சங்க மாநில தலைவர் எம்.பி.முருகையன் கூறியது:கால அவகாசம் தராமல் பணிகளை உடனே முடிக்கும்படி கூறுகின்றனர். இதனால் அழுத்தம், மனஉளைச்சல் ஏற்படுகிறது. மேலும் அடிப்படை கட்டமைப்பும் இல்லை. எல்லாமே ஆன்லைனில் நடந்தாலும் தாலுகா அலுவலகத்தில் இணைய வசதி கிடையாது. வருவாய் ஆய்வாளர் முதல் அனைவரும் எல்லாமே போனில் செயல்படுகின்றனர். அதற்கான லேப்டாப், பிரின்டர், ஸ்கேனர், சர்வர் வசதி, வைபை வசதி கூட இல்லை. அரசிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே நாளை முதல் தினமும் விதிப்படி வேலை என்று காலை 10:00 முதல் மாலை 5:45 மணி வரையே பணியாற்றுவது என்று முடிவு செய்துள்ளோம். பிப்.18 அன்று மாலை ஒரு மணி நேர வெளிநடப்பு செய்து, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவெடுத்துள்ளோம் என்றார்.மாவட்ட தலைவர் கோபி, செயலாளர் முகைதீன் அப்துல்காதர், பொருளாளர் முத்துப்பாண்டி உடனிருந்தனர்.