| ADDED : டிச 05, 2025 05:19 AM
மதுரை: செல்லுார் கண்மாயில் இருந்து வைகையாற்றுக்கு செல்லும் பந்தல்குடி கால்வாயை கான்கிரீட் கால்வாயாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கின. இதற்காக கால்வாயில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. செல்லுார் கண்மாய் நிறைந்தால் அங்கிருந்து வெளியேறும் உபரிநீர் 2.6 கி.மீ., நீள பந்தல்குடி மண் கால்வாய், குலமங்கலம் பகுதி மண் கால்வாய் வழியாக வைகையாற்றுக்கு செல்லும். இரண்டு கால்வாய்களிலும் அவ்வப்போது குப்பை நிறைந்து மண்மேவியது. துார்வாராத நிலையில் வெள்ளம் வந்தபோது கடந்தாண்டு செல்லுார் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து குலமங்கலம் ரோட்டில் மண் கால்வாயை சீரமைக்க ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டது. 310 மீட்டர் நீளமுள்ள மண் கால்வாய்க்கு பதிலாக, ரோட்டின் மேலே வாகனங்கள் செல்லும் வகையிலும், ரோட்டினுள்ளே பாதாளத்தில் கான்கிரீட் சுவர்கள் (கட் அன்ட் கவர்) வழியாக கண்மாய் தண்ணீர் வைகையாற்றுக்கு செல்ல திட்டமிடப்பட்டு 6 மாதத்திற்கு முன் பணிகள் முடிந்தது. மற்றொரு கிளை கால்வாயான பந்தல்குடி கால்வாயை கான்கிரீட் கால்வாயாக மாற்ற சமீபத்தில் ரூ.69.21 கோடி ஒதுக்கப்பட்டது. இதற்கான பூமிபூஜை முடிந்த நிலையில் செல்லுார் கண்மாயில் தற்போது தண்ணீர் முழு கொள்ளளவில் உள்ளதால் பந்தல்குடி, குலமங்கலம் பாதாள கால்வாய் வழியாக தண்ணீர் வைகையாற்றுக்கு செல்கிறது. பந்தல்குடி கால்வாய்க்கு வரும் தண்ணீரை நிறுத்த வேண்டுமெனில் கண்மாயின் கொள்ளளவை ஒன்றரை அடி ஆழம் அளவுக்கு குறைக்க வேண்டும். அதன் பின் பந்தல்குடி கால்வாயின் மடை அடைக்கப்பட்டு கண்மாயின் உபரிநீர், 'கட் அன்ட் கவர்' கால்வாய் வழியாக மட்டும் திருப்பி விடப்படும். இந்த வழியாக அதிகபட்சமாக வினாடிக்கு 500 கனஅடி வரையிலான தண்ணீரை வெளியேற்றலாம். தண்ணீரை நிறுத்துவதற்கான பணிகள் தொடங்கி கால்வாயில் சேறு, சகதி அகற்றப்பட்டு வருகிறது. 18 மாதங்களில் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டாலும் மழையைப் பொறுத்தும், தண்ணீரின் வரத்தைப் பொறுத்தும் வேலை நாட்கள் அதிகரிக்கலாம்.